குழந்தை ஒன்று
இந்து சமுத்திரமே!
எத்தனை உயிர்களைத் தத்தளிக்க
எத்தனித்தாய்…?
நித்தமும் அலைகளால்
புன்னகைத்தாய்… அது பொய்யோ?
வைத்தகண் வாங்கிட முன்னே
அலைக் கரத்தால்
நனைப்பாய்… நகைப்பாய்…
இப்போது வேடங் கலைத்தாயே!
வற்றிய கண்ணில் நீர் சுரந்து
முகத்தில் இரண்டு சமுத்திரங்கள்!!
கடலே! உந்தன் கைப்பிடிக்குள்
உயிர்களைப் பறித்தாய், இதுகொடுமை
ஒரு காகிதக் கப்பல் தத்தளித்தாலும்
தாங்கிடுமோ சிறு குழந்தை!
தாகம் கொண்டு
கரையைக் கடந்து
தாவிடத் துணிந்தாய்
தரையில்...
தாயை இழந்து தந்தையை இழந்து
தவிக்கும் குழந்தைக்கு
பதில் சொல்.
- ஜுமானா ஜுனைட், இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.