செம்மொழி! தமிழ் மொழி!!
தமிழ்
நம் அனைவருக்கும் மொழியன்று - அது
நம் விழி
நாம்,
உலகை அறியவும்
கலைகளைக் காணவும்
அறிவியல், வானியல்
அனைத்தும் அறியவும்
உழவுடன் தொழிலைச்
செய்து பார்க்கவும்
தத்துவ மலர்களைக்
கொய்து பார்க்கவும்
நமக்கு உதவுகின்ற விழி! என்பதால்
தமிழ் மொழியன்று- தமிழ் விழி!
தமிழ் எனும் வயலில்
தழைத்து வளரும் இலக்கியப் பயிரை
வளைத்துக் காக்க
இலக்கண வேலியும் இங்கே உண்டு
வேலிக்குள்ளே நம் இலக்கியப்பயிர்
மரமாய்த் தழைப்பதும் உண்டு!
வேலியைக் கடந்து உயர்ந்து விரியும்
மரமாய்ச் செழிப்பதும் உண்டு!
நம் சிந்தையில் உறைகின்ற
சிந்தைச் செல்வியை
செந்தமிழ் அன்னையை
விந்தைச் செல்வி
என்றும் விளம்பலாம்
ஊரை ஆண்டவள்
உலகை ஆண்டவள்
சீரை ஆண்டவள்
செந்தமிழ் அன்னை இன்று உலகெலாம்
ஆளும் நிலையில் அரியனை ஏறி
அமராவிடினும்
மாளும் நிலையில் மரணப் படுக்கையில்
காய்ந்து வீழாமல்
தனித்து நிற்கிறாள்!
நிலைத்து நிற்கிறாள்!
அகவையால் முதிர்ந்தும்
அயர்ந்து வீழாமல்
தகவுற நடக்கிறாள்
நாக்கு மேடைகளில் நடனம் செய்கிறாள்
இதழ்க் கதவுகளைத்
திறந்தும் மூடியும்
வந்து வந்து காட்சி
தந்து தந்து-நம் சிந்தை கவர்கிறாள்!
அதனால் நம்
சிந்தைச் செல்வியாம்
செந்தமிழ் அன்னையை
விந்தைச் செல்வி என்றும் விளம்பலாம்!
நெடு நாள் முன்னர்த் தோன்றிய தமிழ்எனும்
இப்பெண் போலவே
அன்றைய நாளில் அழகுறப் பிறந்து வளர்ந்த
மொழிப் பெண்களுள் பலர் இன்று
எழுத்து இருந்தும், தலை எழுத்தே என்று
அசைய இயலாத நிலையில் முடங்கி
சீர் இழந்து மரணத்தின் பிடியில்
தளையுண்டு-தாழ்வுற்று
அடியும் தொகையும் அசைவினை இழந்து
பாவினம் எதனையும் நாவினால் நவின்றிடும்
ஆற்றலும் இழந்து அடங்கி விட்டார்கள்!
ஆனால் எங்கள் தமிழ்க்காரிகையோ
எழுத்து, அசை, சீர் பந்தம், அடி, தொடை
அனைத்தும் சிறக்க
பாவினம் கூறும் பூவினமாக
இன்றும் சிரிக்கிறாள் - சிறக்கிறாள்
என்பதால் இவள்
காரிகை மட்டும் அல்லர்! நம் எழுச்சிப்
பேரிகையும் ஆவாள்!
அகத்திய ஆடை தொலைந்த போதும்
‘தொல்காப்பிய ஆடையில் தோன்றிடும் அழகி!
பட்டாடை தொல்காப்பியத்திற்கு மாற்றாக
நல்ல நூலாடை “நன்னூல்” ஆடையும்
அணிந்து மகிழ்ந்து அழகுற மிளிர்பவள்!
வாழ்வதற்குப் பொருள் தேவை-என்பது
உலக மொழியெலாம் உரைக்கும் பாடம்!
ஆனால்
வாழ்வதற்கும் பொருள் தேவை-மக்கள் நாம்
வாழ்வதிலும் பொருள் தேவை
என்பது வண்டமிழ் மட்டுமே இசைக்கும் கீதம்!
அதனால்தான்
அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும்
இலக்கணம் வகுத்த தமிழ்
வாழ்வுக்குரிய இலக்கணத்தைப்
பொருள் இலக்கணம் என்றே பகன்றது!
இருள் சூழந்திருக்கும்
ஏனைய மொழிகளில்
பொருள் இலக்கணம்
என்பதே இல்லை!
எனவே தமிழ் மட்டுமே
பொருள் உள்ளமொழி!
என் தாயின் குரல்
கேளிரை மயக்கும் மென்மைக்குரல் மட்டுமன்று!
பகைவரை மருட்டும் வன்மையும் நிறைந்தது
எதிர்ப்போரை அடக்க
வன்மையே மிகுதியும் தேவை என்பதால்
தமிழின் குரல் - வன்மை சேர்ந்த
குறள் ஆயிற்று! குறளே தமிழின் குரல்!
அது வன்மையுடன் நன்மையும் கொண்டது
என்பதால்
வெறும் குறள் அன்று-திருக்குறள்
அதுதான்
தமிழ் அணங்கின் குரலானது!
அரசர்தம் கரத்தில் பற்றியிருக்கும்
செங்கோல்தான் அதிகாரம்
செய்யும் என்பர்!
நம் தமிழ் அரசியின்
கால் சிலம்பு கூட
அதிகாரம் செலுத்தும் ஆற்றல் கொண்டது
என்பதால் தானோ?
தமிழின் சிலம்பு - சிலப்பதிகாரம் ஆனது!
அதி, காரம் இல்லாத
அதிகாரம் - சிலப்பதிகாரம்!
பூவுக்கு இன்னொரு பூவைச் சூட்டுதல்
வழக்கம் இல்லை! அது
வாய்ப்பதும் இல்லை!
ஆனால், நம்
சிந்தா மணியாய் விளங்கும் தமிழ்த்தாய்க்கு
சிந்தாமணியே இன்னொரு மணியளி!
இனிமையும், வளமையும் எழிலும் நலமும்
சிந்திடும் மணியாம் தமிழ்த்தாய், ஆடிய மணியோ
சிந்தா மணி!
அந்த மணியுடன்
மணியால் ஆன மேகலை என்னும்
அணியும் கூட அணிபவள் தமிழ்ப்பெண்!
மணிமேகலை! தமிழ்த்தாய்க்கு
அணிமேகலை!
தமிழ்,
எத்தனை பகைவந்து
எதிர்த்தபோதும் அஞ்சி வளையாதவள்
என்பதால்
அவள் கரத்தில் வளைந்திருக்கும்
வளையல் கூட
வளையாபதி எனும் பெயர் பெற்றது!
குண்டலகேசியும் கொண்டவள் தமிழ்ப்பெண்!
வடமொழி நங்கை சூடியிருந்த
இராமகாதை என்னும் அணியும்
தென்மொழிச் செல்வி அணிந்தபோது
மேலும் அழகு மேவிடப்பெற்றது!
கம்ப சித்திரமாய்க் காட்சி அளித்தது!
பாரதம் ஏறி வந்த பைந்தமிழ்த்தாய்
வடவரசி பவனி வந்த பாரதத்தையும்
வில்லினால் கவராமல் வில்லியினால்
கவர்ந்து கொண்டாள்!
அந்தப் பாரதமும் தமிழின்
சொந்த பாரதம் ஆனது!
பெரியபுராணம் -அது தமிழுக்கு
உரிய புராணம்!
தொண்டர் பெருமை கூறும்
அரிய புராணம்!
பேரிலக்கியப் புடவை உடுத்திப்
பேரழகுக் குமரியாய் உலாவரும் தமிழணங்கு
சிற்றிலக்கியச் சிற்றாடைகளும் அணிந்து
சிறுமகளாகவும் ஆடி வரும் திருமகளாகவும்
விளங்குகின்றாள்!
அந்த வகையில் தொண்ணூற்று வகை சிற்றாடை
உடையவளாய் இனிய தமிழ்
இலங்குகின்றாள்!
தமிழ்,
இலக்கண இலக்கிய வளம் படைத்தவள்
எளிமை எனும் நலம் படைத்தவள்
உலகில் பலமொழிகளைப் படைத்தவள்
நாம், படையலிட்டுப் படைத்து வணங்கும்
தெய்வநிலை படைத்தவள்!
தமிழ்
மொழ அமைப்பில்
முழுமை பெற்ற செவ்வியமொழி!
எண்ணியவற்றை எண்ணியவாறே
எழுத்தில் வடித்திட ஏற்றமொழி!
ஏற்றம் மிக்க மொழி!
இலக்கியம் அறிவியல்
எல்லாத்துறைக்கும்-இன்று
கண்ணெண விளங்கும்
கணினித் துறைக்கும்
பயன்தரும் உயர்மொழி!
முன்னைப் பழமைக்கும்
முன்னைப் பழம் பொருளாய்
பின்னைப் புதுமைக்கும்
புதுப்பொலிவு பெற்றதுவாய்
விளங்குவன இரண்டு மட்டுமே!
ஒன்று தெய்வம்!
இன்னொன்று தமிழ்!
எளிமை, இனிமை, அருமை, வளமை
பெருமை என்னும் எல்லாச் சிறப்பும்
எம்மொழிக்கு உண்டு?
எம்மொழிக்கே உண்டு!
எம்மொழி செம்மொழி?
எம் மொழியே செம்மொழி
செம்மொழித் தமிழ்
செம்மையைச் செய்யும் மொழியும் தமிழ்
அம்மையும் தமிழ் - அனைத்தும் தமிழ் - அதனால்
செம்மொழித் தமிழை வணங்குவோம்!
தமிழால் வணங்குவோம்!
- முனைவர் மா. தியாகராஜன், சிங்கப்பூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.