ஏன்..?
நீ யார் தோட்டத்துப்
புத்தம் புது மலரோ?
உன்னை என் தலையில்
சூடிக் கொள்கிறேன்..!
நீ எந்தக் கடல்
முத்தோ?
உன்னை என் மாலையில்
கோர்த்துக் கொள்கிறேன்..!
நீ எந்த மண்ணின்;
தங்கமோ?
உன்னை வளையலாய்
அணிந்து கொள்கிறேன்..!
நீ எந்தக் காட்டுச்
சந்தன மரமோ?
உன்னை அரைத்துக் குழைத்து
உடம்பில் பூசிக் கொள்கிறேன்..!
நீ எந்தத் தறி
பட்டாடையோ?
உன்னை உடுத்தி
என் மேனி அழகு கொள்கிறேன்..!
ஆனால்,
உன்னை மட்டும்
ஊரெல்லாம் தேடி
உத்தமன் எனத் தெரிந்து
பாக்கு வெற்றிலை மாற்றி,
பத்திரிகை வைத்து,
பந்தல் போட்டு,
பந்தி விளம்பி,
பந்துக்கள் மத்தியில்
மாலை மாற்றி
மந்திரங்கள் ஒலிக்க
கெட்டி மேளம் கொட்ட
தாலி ஏற்று
கணவனாகக் கொள்கிறேன்..!
ஏன் இத்தனை
சடங்காச்சாரங்கள்..?
சம்பிரதாயங்கள்..?
- பாளை.சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.