தீபம் ஏற்றுவோம்...!
தொலைந்து போன எம்தேசத்தை
தீபம் கொண்டு தேடினோம்
எத்தனை தீபாவளிகள்
தீபங்கள் ஒளிர்ந்தே ஒழிந்தன.
நரகாசுரனோ
நரபலியெடுத்துக் கொண்டேயிருக்கிறான்
இராணுவ உடைப்புத்தனாக...
புத்தபிச்சுவாக...
இயக்கர்குல அரக்கர்களாக...
அரசியலாக இன்னும் இன்னும்...!
எத்தனை நச்சுக் காற்றுக்கள்
கதை கதையாய்ப் புயலாயின
புழுகிப்புழுகி சூறாவளியாயின.
கண்களை மூடிக் கொண்டு
காதுகளைப் பொத்திக் கொண்டு
தீபத்தைச் சுடச்சுடச் சுமந்தோம்
எம்முதுகுகளில்
தெரியாத புரியாத வழிநோக்கி...
மகாத்மா காந்தியின்
பொக்குவாய் சொல்லும்
பொல்லும் சேர்த்தே சுட்டன.
பொல்லைத் தந்த காந்தியின் மகன்
கொல்லையால் கொன்றான்
காந்தி பொல்லால்
அவரின் புத்திரர்களைக் கலைத்துவிட்டு
மாக்சையும் மாவோவையும் கூட்டி
ஆயுதங்களில் சொருகிக் கொண்டு
தடுத்தவர்களையும்
தட்டிக்கேட்டவர்களையும்
தயங்காது சுட்டோம்
மாவோமாக்சையும் சேர்த்துத்தான்.
அறிவை அடைவு வைத்து
வெறுமுணர்வில்
சோறா சுதந்திரமாவென ஏற்றிய தீபத்தால்
தீண்டிய அனைவரையும் தீண்டியது
தன் நிழலை மட்டும் நிஜமென்று நம்பியது.
தீபத்தின் ஒளியுடன்
துரோகி நிழலும் தொடர்ந்தே சென்றது
முள்ளிவாய்கால் வரை
தீபம் சுமந்து தொலைதூரம் சேர்ந்ததால்
தீபத்திலேயே விழுந்தன சோர்ந்த விட்டில்கள்
விரும்பினாலும் இனித் திரும்பா...
தொலைந்து போன விட்டில்களை
தொலை தொலைவாய் தேடித் தேடி
இன்றும் படை நடத்துகிறார்கள்
விட்டில் சுமந்தவர்கள்
இன்னொரு ஈழப்போர் வரை...
கொன்றதைக் கொடுத்துவிட
சவமென்ன சிரஞ்சிவியா?
சவங்கள் கூடச் சிரஞ்சிவாகும் என்தேசத்தில்
இசைப்பிரியா பாலச்சந்திரன் போல்
அறிவாயுதம் ஏந்தும்போது.
ஏற்றும் தீபங்கள் இனியாவது
உணர்வுகளில் இன்றி
அறிவில் ஏற்றப்படுமா
அறிவறியா அறிவாளிகளே...!
- நோர்வே நக்கீரா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.