தையே வருக! தனித்தன்மையுடன் வருக!!
தை தை
நம்
இதயத்தின் கிழிசல்களை தை,
தைத்திடு
அந்நாளே
தைத்திருநாளாகட்டும்.
தைத்திரு தைத்திரு
நம் இதயத்தின்
கிழிசல்களை தைத்திரு.
தைத்திரு தைத்திரு
நம் தேசத்தின்
பொத்தல்களை தைத்திரு.
ஈழ இராச்சியத்தின்
ஆழத்திலிருந்து
மண்ணெடுத்து
பானைகள் புனையவும்,
அங்கிருந்தே நீர்
மொண்டு வந்து
பானையில் ஊற்றி
பொங்கலிடவும்
காலம் வருமென
தீர்ப்பெழுதி வா தை!
பசி பட்டினி
நோய் நொடி
சூது வாது
கெட்டது தீயது கொடியது
பீடைகளைக் கொன்று
இருள் அகற்றி,
செய்வினை கொடுவினை
ஊழ்வினை தகர்த்து,
பொல்லாப்புகள்
விக்கினங்கள்
வியாதிகள்
தொல்லைகள் வேரறுத்து,
அஞ்ஞானம் அகற்றி
ஞான ஒளி பாய்ச்சி
உள்ளிருந்து உந்துசக்தியாக
எமை இயக்குகின்ற
“சூரிய தேவன்” மேல்
ஆணையாக,
“அநீதிக்கு எதிராக
பொங்குவோரே
பொங்க வேண்டும்”
என்று புதுவிதி
எழுதிட வருக!
தையே வருக!
தனித்தன்மையுடன் வருக!
- தாயகக் கவிஞர் அ.ஈழம் சேகுவேரா,முல்லைத்தீவு, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.