உறங்காத கடல்..!
உறங்காத கடலுக்கு
ஓயாத அலைகள்..!
அன்று,
கடற்கரையில்
சுண்டல் விற்ற சிறுவன்
இன்று இல்லை...
பூ விற்ற புஷ்பம்
வருவதேயில்லை...
சிப்பி பொறுக்கி
விற்றுப் பிழைத்த
சின்னப் பெண்
அங்கு இல்லை...
அழுகிய மீனுக்காய்
அலைந்து திரியும்
நொண்டி நாயைக்
காணவில்லை...
பட்டம் விட்ட
பள்ளிச் சிறார்கள்
ஐஸ் விற்ற அய்யப்பன்
பலூன் விற்ற தாத்தா
முருக்கு விற்ற மூதாட்டி
இவர்கள் அங்கு இல்லை...
மனம் விட்டுப் பேச
மறைவிடம் தந்த
பழைய படகைக்
காணவில்லை...
இன்று,
சுண்டலும், பூவும்
ஜஸ்கிரீமும், பலூனும்
ஆங்காங்கே விற்கிறார்கள்.
ஆனால், வேற்று மனிதர்கள்...
புதுப் படகு
புது நிழல்
புது ஜோடிகள்
மணிக் கணக்கில்
காதல் பேச்சு...!
இன்று,
கடற்கரை மணலில்
நான் தேடி அலையும்
காதலி கால் தடங்களை
நாளை,
அவர்களும் தேடலாம்..!
உறங்காத கடலுக்கு
ஓயாத அலைகள்..!
- பாளை.சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.