காத்திருக்கும் மனசு!
இந்த மனம்
நீண்ட கேள்விகளால்
எப்போதும் நிறைகிறது –
ஆனால் அக்கேள்விகளுக்குத்தான்
இன்னும் விடைகள் கிடைக்கவில்லை...
இந்த மனம் ஒவ்வொன்றிற்காகவும்
காத்துக் கொண்டே இருக்கிறது...
ஆம்...!காலமெல்லாம்
எதற்காகவோ இம்மனசு
காத்துக் கொண்டே இருக்கின்றது…
கனவுகளைச் சுமந்துகொண்டு
வளைகுடாப் பகுதிகளுக்குப்
பறந்த காலம்...
சொந்தங்களையும், நட்புக்களையும்
அனைத்தையும் காத்திருக்க வைத்துவிட்டு
வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக
போராடிய காலம்...
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு...
‘நீண்ட பாலை நிலங்களில்
காய்ந்த புற்களைப் போல்
தொலைத்துவிட்ட ஆசைகள்...
மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு
இந்த மனம்…
எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது...
‘ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும்
வளைகுடாவின் பசுமையைப் போலன்றியும்
ஆண்டுகளிரண்டில் பார்த்துவிட்டு வந்த
குடும்பத்து முகங்கள்…
உறவுகள்...காதல்
நட்பின் வட்டங்கள்... இவையனைத்தும்
பாலைவனக் கானல் நீர்போல்….
தூரத்தின் இடைவெளியில் -
சிக்கிக் கொண்ட சுமைகளாகவே
இதயத்தைக் கனக்கச் செய்கின்றன...
‘நெருப்பைப் போல் தகிக்கும் வெயில்;
தசைகளுக்குள் ஊசிபோல் குத்தி
வலிக்கும் குளிர்
கண்களை அடைக்கும் மணற் காற்று
இவற்றை எல்லாம் கடந்தும் -
உறவுகளின் நினைவுகளில் வலிக்கும்; வலி
வாழ்க்கையின் ஏக்கப் பெருமூச்சு…
இவையெல்லாம் தீர…
வதைபடுவதைத் தவிர வேறுவழியுமில்லை…
‘வேலைக்காகச் சான்றிதழ் தூக்கிக் கொண்டு
ஏறி இறங்கிய படிகள்...
இலஞ்சம் கொடுக்காததால் உள்நாட்டில்
மறுத்தளிக்கப்பட்ட பணி வாய்ப்புகள்...
உறவுகளின் கேலி கிண்டல்கள்...
இவற்றையெல்லாம் வென்றெடுக்க
வெளிநாட்டு நிறுவனங்களில்
வேலைதேடல்...அத்தேடலில்
வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதென
வெடித்துச் சிரித்த சிரிப்பு...
விமானத்திலிருந்து இறங்கிய பின்
வேலைசெய்து வாங்கிய முதல் மாத ஊதியம்…
கேலி பேசிய அனைவரின்
முகங்களிலும் கரிய பூசியதாக
நினைத்துக் கொண்ட நினைவுகள்...
வாழ்க்கையில் இவை எல்லாவற்றையும்
ஈடுகட்ட கண்ணீர்தான்...
கண்ணீர்தான் மிச்சமாகுமென
ஏனோ...அன்று தெரியவில்லை...
எதையோ தோற்கடித்துவிட்ட
வீராப்பு...ஆவேசம்...
ஆனால்...
முடிகொட்டி
வாழ்க்கை மொட்டையாகிக்
கிழவனென்று பட்டம் சுமந்து ஊர் செல்கையில்
மிக நன்றாகவேத் தெரிகிறது;
‘தெரிந்து மட்டும் என்ன செய்ய
அதோ என்னை சுமந்து வந்த விமானம்
திரும்பிச் செல்கையில்
இங்கிருந்து நிறையப் பேரை -
ஏற்றிக் கொண்டு தான் செல்கிறது;
அதே கனவுகளை நோக்கி!!
ஆனால் மனம் மட்டும்…
எதையோ...எதற்காகவோ...
யாருக்காகவோ...
காத்துக் கொண்டே இருக்கிறது...
- முனைவர் சி.சேதுராமன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.