முடியாத கூந்தல்...?
பலபோர் வெற்றியின் முடிவுகளை
அலங்கரித்த முடியொன்று
சூதாடி முடியாது முடிதுறந்ததால்
தன்முடிவிழுத்தி முடிவிரித்து
முடியை முடியேன் என
முடிவெடுத்தாள் ஒருத்தி
முடிவில் உருண்டு முடிந்தன முடிகள்
குருதியில் ஓடியது குருசேத்திரம்
முடியாத முடியால் அழிந்தது குருகுலம்
நடந்து முடிந்தது மகாபாரதம்
தன் சிலம்பொன்று சிக்கியதால்
சினம்கொண்டு சீறி முடி கலைத்து
மூர்க்கமாய் எழுந்தாள் இன்னொருத்தி
முடிவாய் முடி துறந்தான் பாண்டியன்
முடியாத அவள் கூந்தலால்
எரிந்து கரியாய் முடிந்தது மதுரை
கணவனை வேண்டி
முடியாத தன்நீள்முடியை
முடியாது முடிவாக இருந்தாள்
அசோகவனத்தில் ஒருத்தி
முடியாத அவள் கூந்தலால்
முடிந்தது அரக்கர் குலம்
எரிந்து பொரிந்து முடிந்தது இலங்காபுரி
முடியாத கூந்தல்களால் இத்தனை
முடியாத முடிவில்லா அனர்த்தங்கள்
அழிவுகள் உயிர்சேதங்கள்.
முடியாத கூந்தலை
அவிழ்த்து ஆடவிட்டலையும் பெண்டீரால்
முடியப்போவது எது?
அழியப்போவது யார்?
எரியப்போவன எவை?
அரைமொட்டை ஆயினும்
அள்ளி முடிகிறார்கள் ஆண்கள்
முடிவின்றி காக்கப்படுவது எது?
வாழப்போவது யார்?
- நோர்வே நக்கீரா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.