உன்னை நேசிக்கும் உண்மைகள்
வெடியோசை கேட்டு
வீட்டை விட்டு ஓடும் நாய்களாய்
அன்று நாங்களும்....!!!
சீறுவாணம்...சின்னவெடி ..சீனவெடிய... பூவிறிசு
எதுவாயினும் நின்றிருக்க மாட்டோம்
ஒடுவது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
ஓடியோடியே பழக்கப்பட்ட நான்
வசதி வாய்ப்புகளால்
வெகுவேகமாக ஓடி மறைந்து கொண்டேன்
நீயும் வருவாய் என்ற நம்பிக்கையுடன்.
அமளி அடங்கிடத்தான் தெரிந்தது
நாம் பதுங்கியது
காடுகள்...பனிக்காடுகள்
பாலைவனங்கள்
குளிர் குத்தும் தேசங்கள் என்பது
கண்டங்கள் கடந்தபோதுதான் கண்டோம்
நாம் கடந்த கண்டறியாக் கண்டங்கள் என்று
ஊருக்கு வந்தோம்
ஊரைக் காணவில்லை
அதையும் களவெடுத்து விட்டார்கள்
அன்னியர்கள்.
உன்படத்தை வைத்து
யார்யாரே அழுதுகொண்டிருந்தார்கள்
ஒப்பாரிக்குக் கூடத் தமிழ் இல்லை.
காதுக்குள் கல்லெறியும் மொழியில்
கடுகடுக்கிறார்கள் சிலர்
எம்மக்களோ வாய்மூடி மௌனியாகி
தியானிக்கின்றனர்
இன்னொரு தேரோட்டிக்காய்.
உன்பிணத்தையும் எம் ஓட்டத்தையும்
காரணம் காட்டி காசு கறந்தவர்கள்
புதுப்புது கார் காராய் ஓடுகிறார்கள்
கொட்டல்களில் வாழ்கிறார்கள்
இவர்களை இனிப் புதுக்கப்பல்கள்
வாங்க விடுவதா என்பதைத்
தீர்மானிக்க வேண்டியது
நீயும் நானும்தான்
தட்டிக்கேட்கிறோம் என்பதனால் - நாம்
காலனின் கைக்கூலிகள் அல்ல
உன்னை நேசிக்கும் உண்மைகள்.
- நோர்வே நக்கீரா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.