செல்லாக்காசு...!
கருவறையில் ஈரைந்து மாதம்
உன்னைச் சுமந்து
இரத்தத்தைப் பாலாக்கி
உனக்குத் தந்து
உன்னை இதயத்தில் சுமந்த
உன் தாயும் செல்லாக்காசு!
உனக்கு மனைவி என்று
புது உறவு வந்த பொழுது...!
பள்ளி, கல்லூரிக்கு
அலையாய் அலைந்து
இடம் வாங்கித் தந்து
உனக்காக உழைத்து
ஓடாய்த் தேய்ந்து
தொண்டனாய், தோழனாய்
உன்னுடனே இருந்து
உன் வாழ்வுக்குப்
உன்னதப் பொருள் தந்த
உன் தந்தையும் செல்லாக்காசு!
பணி ஓய்வு பெற்று
வீட்டுக்கு வந்த பொழுது...!
இன்பத்திலும் இன்னலிலும்
இணைந்திருந்த
உடன் பிறந்தவர்களும் செல்லாக்காசு!
பாட்டன் சொத்தைப்
பங்காய்க் கேட்ட பொழுது...!
சிறிய வயது முதல்
சேர்த்து வைத்த நட்பும்
உனக்குச் செல்லாக்காசு!
நீ சேர்த்து வைத்த பணத்தில்
கடனாகச் சிறிது கேட்ட பொழுது...!
இப்படி உறவும் நட்பும்
உனக்கு செல்லாக் காசாகிப் போனது...!
காலச் சுழற்சியில்
எதுவும் மாறும்...!
எப்படியும் மாறும்...!
உறவுக்கும் நட்புக்கும்...
நீயும் ஒரு நாள் செல்லாக்காசு...!
இதையெல்லாம்...
நீ உணராத பொழுது...!
- முனைவர் ம.தேவகி, திண்டுக்கல்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.