து-வேசம் = துவேசம்
துருவத்தில்
தூங்கிக் கொண்டிருந்தது துயரம்- நோர்வே
நிரம்பிக் கொண்டிருக்கும்
ஊருந்தும் பேருந்தில்
நிரம்பாமலே பெருமூச்சு விடும்
கரியாசனமான
என் அருகாசனம் அரியாசனமாய்
விண்ணுலக விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு
கழுத்தில் தொங்கும் சிலுவையும் கையுமாய்
விழுந்து விழுந்து நிற்கிறார்கள்
வாழ்வே விழப்போகும்
பலவெள்ளைக் கிழடுகள்.
என்தோழ்பை தொணதொணத்தது
"உன்மனம்போல் கொதிக்கிதடா மடி
கிழடி கூட அருகிருக்கமாட்டாள்
என்னையாவது உன்னருகிருத்து"
ஒருபயணச்சீட்டில்
இரு இருக்கையில்
இருவர் பயணம் செய்கிறோம்.
தோள்பை
இப்போ தொங்க மறுக்கிறது.
இறங்கிப்போகும் போது
ஒரு கிழவியின் காதில் நான்
"நீ வணங்கும் யேசுவும் கறுப்பன்தான்"
முறைத்துப் பார்த்தபடி
விறைத்துப்போய் நின்றாள்
விண்ணுலக விசாவை இரத்து செய்வாளா?- இனி
நரகம்தான் இவர்களுக்குச் சொர்க்கம்
- நோர்வே நக்கீரா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.