வீணை மத்தளமாகிறது

கண்ணிற்குள் வளர்ந்தமகள் இமைப்பட் டாலே
கலங்கிடுவாள் எனப்பூவாய் வளர்ந்த பெண்ணாள்
மண்ணிற்குள் விழுந்தவிதை மெல்ல மெல்ல
மண்பிளந்து வளர்வதினைப் பேணல் போல
பண்ணிற்குச் சேர்க்கின்ற சுருதி போல
பக்குவமாய் நாள்பார்த்து வளர்ந்த பூவாள்
தண்ணீர்க்குள் வலையவரும் மீனாய் வீட்டில்
தவழ்ந்துவரும் தென்றலென வளர்ந்த கண்ணாள் !
நெஞ்சோடு அணைத்தபடி இறக்கைக் குள்ளே
நெகிழ்வோடு கோழிகாக்கும் குஞ்சு போல
கிஞ்சித்தும் தூசிவந்து படியா வாறு
குளர்பதன அறைக்குள்ளே பேணு கின்ற
விஞ்ஞான அற்புதமாம் கணினி போல
வீட்டிற்குள் வாய்த்தநல்ல விளக்காய் வண்ண
மஞ்ஞையெனும் அழகுப்பெட் டகமாய் அன்பு
மலர்களிடை மணமாக வளர்ந்த பெண்ணாள் !
வருங்காலக் கனவுகளோ கோடி யாக
வளர்த்துவைத்த நெஞ்சினளாய் வாழ்வை யெண்ணிப்
பருவத்தில் நிற்குமவள் கருத்திற் கேற்ப
பல்வேறு இடங்களிலே பார்த்துப் பார்த்துப்
பொருந்துகின்ற குணம்பார்த்து குடும்பம் பார்த்துப்
பொருளோடு தகுதிதனை ஆய்ந்த பார்த்துத்
திருமணத்தை இருமனங்கள் கலப்ப தற்குத்
திருவாக நடத்திவைத்து மகிழ்ந்தார் பெற்றோர் !
புதுமணத்தின் நுகர்ச்சியிலே பொழுதும் நன்றாய்
புத்தின்பத் தேடலிலே கழிந்து செல்ல
மதுமயக்கம் தெளிதல்போல் மோக வாசை
மங்கிவர மணவாளன் குணமும் மாறப்
புதுமனைவி எனத்தலையில் தூக்கி வைத்துப்
புகழ்மொழிகள் பொழிந்தநாவில் தேள்கொ டுக்காய்
எதுசெயினும் குற்றமெனக் கொட்ட லானான்
எல்லாமும் தாய்க்கயிற்றால் ஆட லானான் !
அன்பினிலே வளர்ந்தமகள் துன்பப் பட்டால்
அதைப்பார்க்க முடியாமல் கேட்ட தெல்லாம்
முன்வந்து தந்திடுவார் என்ற நோக்கில்
முள்ளாகச் சொற்களிலே குத்தும் அத்தை
தன்பங்காய் மாமனாரும் சாட்டை வீச்சாய்
தளிர்நெஞ்சைப் புண்ணாக்கி வீசுவார் சொல்லை
புன்னகையை இரவினிலே சிந்திக் காலை
புன்செயலைப் புரிகின்ற கொடுமைக் கணவன் !
கதிர்விழிக்கும் முன்விழித்து வாசல் கூட்டிக்
கலைமிளிரும் கோலமிட்டே அழகு செய்து
முதியவர்க்கோ இனிப்பில்லாப் பாலைத் தந்து
முரண்நெஞ்சக் கணவனுக்கோ இனிப்பைச் சேர்த்தும்
மதிக்காத நாத்திக்கும் மணக்கத் தந்து
மலையளவு பாத்திரங்கள் துலக்கி வைத்தும்
சதிமனத்தார் என்னசொல்வார் என்ற அச்சம்
சதிராடும் முகத்தோடு வலைய வந்தாள் !
உப்பில்லா உணவுவகை ஒருவ ருக்கு
உரப்பில்லா புளிகுறைவு ஒருவ ருக்கு
உப்போடு சுவையுணவு மற்றோர்க் கென்றே
உணவுதனைப் பலவகையாய் செய்த ளித்தும்
தப்புதனைக் கண்டுரைக்கும் குடும்பத் தார்கள்
தான்விரும்பும் ஒருசுவையை ஆக்கி யுண்ண
ஒப்புதலும் இல்லாமல் அடிமை யாக
ஒப்புக்கே மருமகளாய் பணியா ளானாள் !
ஏடுகற்ற கல்விக்கும் பயனு மின்றி
எந்தவொரு நூல்படிக்க நேர மின்றி
வீடுகூட்ட துணிதுவைக்க வீட்டுக் காரர்
வினையாற்றச் செல்வதற்குப் பணிக ளாற்றி
மாடுபோல மாமிமாமன் நோய்க ளுக்கு
மருந்தளித்துத் தாதியெனத் தொண்டு செய்து
வாடுகின்ற கிளியைப்போல் இல்லக் கூண்டில்
வாயிருந்தும் ஊமையெனக் குமுற லானாள் !
அலங்காரம் செய்துபுறம் கணவ னோடு
ஆசையோடு உரையாடிச் செல்வ தற்கும்
கலகலென பழகிவந்த தோழி மாரைக்
கண்ணாலே கண்டுநலம் கேட்ப தற்கும்
வலம்வந்த பிறந்தவீட்டுச் சுற்றத் தாரின்
வாழ்த்துகளை நன்னாளில் பெறுவ தற்கும்
குலமகளாம் பெயர்சூட்டி இயலா வாறு
கூட்டிற்குள் சிறகுவெட்டி முடக்கி வைத்தார் !
கோதையவள் கற்பனையும் கனவு மெல்லாம்
கோட்டைமணல் போலவன்றோ ஆன தின்று
போதையாகும் தட்சணையின் கொடுமை யாலே
பொன்வீணை மத்தளமாய் ஆன தன்றோ
காதைகளும் கவிதைகளும் உரிமை பேசிக்
கட்டுகள்தாம் உடைந்ததென்று முழங்கி னாலும்
பேதையராய்த் துணிவின்றி உள்ள மட்டும்
பெண்ணுரிமை என்பதெல்லாம் வெற்றுப் பேச்சே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.