எல்லாமும் பறிபோகும்!

வணிகந்தான் செய்வதற்கே ஆங்கி லேயர்
வந்திந்த நாட்டினையே அடிமை சேய்தார்
மணிமகுட மன்னர்கள் தம்மை வீழ்த்தி
மண்தன்னில் இங்லாந்தின் கொடியை நட்டார் !
அணியணியாய்க் கப்பலிலே வந்தி றங்கி
அருஞ்செல்வம் தமைச்சுருட்டி எடுத்துச் சென்றார்
துணிவோடு எதிர்தவரைத் தந்தி ரத்தால்
துணையாக்கித் தம்மாட்சி நிலைக்கச் செய்தார் !
செக்கிழுத்தும் தொழுநோயை உடலில் பெற்றும்
செவ்வுயிரைக் களத்தினிலே பலியாய் இட்டும்
பக்கத்தில் மனைவிமக்கள் உறவை விட்டும்
பகலிரவு தலைமறைவாய் மறைந்தி ருந்தும்
முக்கடலைக் கடந்துதீவு அந்த மானில்
முற்றாக விலங்காக நடத்தப் பட்டும்
மிக்கயர்ந்த சுதந்திரத்தை மான மென்றே
மிகுதுன்பம் ஏற்றுமுன்னோர் பெற்ற ளித்தார் !
கட்டபொம்மன் வேலுநாச்சி திப்பு சுல்தான்
காந்தியோடு நேத்தாஜி சிதம்ப ரங்கள்
கொட்டியசெங் குருதியிலே பெற்ற நாட்டைக்
கொத்தடிமை செய்வதற்கே முனைந்தா ரின்று !
திட்டமிட்டே ஐந்தாண்டு திட்டத் தாலே
திருநாடாய் உயர்த்திட்ட இந்தி யாவை
வட்டமிட்டுப் பார்த்திருக்கும் வல்லூர் கட்கே
வார்த்திடவே ஆட்சிசெய்வோர் துணிந்து விட்டார் !
உலகமயம் என்கின்ற மாயை காட்டி
உள்நுழைய அந்நியரை அனும தித்து
நலமாக நாம்செய்யும் வணிகந் தன்னை
நயமாக அவர்கைக்கே மாற்றி விட்டார் !
குலத்தொழிலும் பயிர்த்தொழிலும் கிராமந் தன்னில்
குந்திசெய்யும் தொழிலனைத்தும் மாறிப் போகும்
நிலம்மீண்டும் அடிமையாகும் அந்நி யர்க்கே
நின்றெதிர்க்க வில்லையென்றால் குனிவோம் நாளை !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.