நாளைய மனிதன்
அக்கம் பக்கம் அறிந்தவனாய்
அன்பு நெஞ்சில் நிறைந்தவனாய்
துக்கம் தோய்ந்த உறவுகளின்
துயரில் பங்கு கொண்டவனாய்
தக்க உதவி கேட்காமல்
தமராய் எண்ணிச் செய்பவனாய்
மிக்க நேயம் உடையவனாய்
மிளிர்ந்தான் நேற்று மனிதனிங்கே !
பொருளே வாழ்வின் குறிக்கோளாய்ப்
பொறுப்பே சிறிதும் இல்லானாய்
அருளை மறந்த மனத்தவனாய்
அடுத்தவர் வீழக் காண்பவனாய்
இருளின் செயலைச் செய்பவனாய்
இன்னல் விளைத்து மகிழ்பவனாய்
உருவில் மட்டும் மனிதனாக
உலவு கின்றான் இன்றிங்கே !
குண்டுகள் நிறைந்த உடலாகக்
குருதி யெல்லாம் நஞ்சாகக்
கண்ணோ கணினிப் பொறியாகக்
காட்சி யெல்லாம் எந்திரமாய்
விண்ணை வாழும் வீடாக்கி
விரிந்த கோள்கள் தனதாக்கி
மண்ணை மறந்த மனிதனாக
மாறி நாளைப் போவானோ !
வரவாய் அறிவு வளர்ந்தாலும்
வானே கைக்குள் விழுந்தாலும்
உரமாய்ப் புதுமை மலர்ந்தாலும்
உலகே கடுகாய்ச் சிறுத்தாலும்
மரத்தைத் தாங்கும் வேராக
மனத்துள் அன்பு இல்லையென்றால்
சிரமே இல்லா உடலாகச்
சிதைந்தே மனிதன் அழிவானே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.