முயற்சி!
முயன்று பார்ப்பது முயற்சி
அதில் வெற்றி காண்பது மகிழ்ச்சி
தவறித் தோற்பின் அயற்சி
மானிடகுலம் கடைபிடிக்கும்
நடைமுறை உண்மை இதுதான்
நடைபயிலும் குழந்தை வீழ்வதும்
வீழ்ந்த குழந்தை எழுவதும்தான்
நிமிர்ந்த நடைக்குக் காரணம்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை
இதை பாலரும் அறிவார் பூமியிலே
பாலவயதில் பயின்ற பாடத்தை
பயணிக்கும் வாழ்க்கைப் பாதையிலே
பரிட்சித்துப் பார்க்க என்ன பயம்?
முயற்சி எல்லாம் வென்றுவிட்டால்
வாழ்வில் சுவாரசியம் என்பதேது?
மயிரைக் கட்டி மலையிழுத்தால்
மலையும் வந்தால் மகிழ்ச்சியே
மயிர் அறுந்து போனால் இழப்பென்ன?
மூத்தோர் சொன்ன உண்மையிது
உறுதியாய் இதனை நம்புவோம்
முயற்சி செய்யா மனிதனும்
உயிர் இல்லாப் பொருளும்
ஒன்றே என்றார் அறிஞரும்
இதை உணர்ந்து நடந்தால் நன்று!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.