நீ(யே) வேண்டும்...!
வாழ்வின் சிகரங்கள் தொட்டாலும்
சிறகாய் நீ வேண்டும்
தாழ்வின் பள்ளத்தாக்கில் வீழ்ந்தாலும்
தோள்சாய நீயே வேண்டும்
என்இதயம் நிறைந்த உயிரின்
உதிரமாய் நீ வேண்டும்
என்உதிரம் கலந்த உயிர்மூச்சாய்
நிறைந்திட நீயே வேண்டும்
என்மனவானில் ஒற்றை நிலவாய்
உலவிட நீ வேண்டும்
என்மணவறையில் மணமகளாய் தாலியேந்தி
கைப்பிடிக்க நீயே வேண்டும்
என் உயிர்த்துளிக் கருவேந்தி
வாரிசு சுமக்க நீ வேண்டும்
என் உயிர் போகும் நொடிவரை
கையருகில் நீயே வேண்டும்
என்தள்ளாத வயதில் நடைபயில
கைதாங்கலாய் நீ வேண்டும்
என்பொல்லாத பேரக் குழந்தைகளின்
பாட்டியாய் நீயே வேண்டும்
என் இதழ் தீண்டும் உன்பெயரை
உச்சரித்துக் கேட்க நீ வேண்டும்
உன் இதழ் தாண்டும் புன்னகையை
எதைக் கொண்டு தடுத்தாலும்
என் வாழ்க்கைத்துணையாய்...
நீயே வேண்டும்...!
- ஆடலரசன், ஐக்கிய அரபு அமீரகம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.