ஏங்கவைக்கும் எலும்புத்துண்டு!
தெருநாய்தான் எலும்பதனைக் கவ்விக் கொண்டு
தெருவோரம் கடிப்பதற்கு முனைந்த போது
அருகினிலே மற்றொருநாய் வந்து நிற்க
அடுத்தடுத்துப் பலநாய்கள் கூடிற்றங்கே
பருத்தவொரு நாயொன்று எலும்புத் துண்டைப்
பறிப்பதற்குப் பாய்ந்ததுவே தெருநாய் மீது
தருணமிது எனநாய்கள் ஒன்றுக்கொன்று
தாம்பிடுங்கப் போர்க்களமாய் ஆனதங்கே!
துண்டெலும்பு வாயிருந்த நாயோ ஓடத்
துரத்திப்பல் நாய்களுமே பின்னால் ஓடிக்
கொண்டநாயைத் தாக்கிடவே எலும்புத் துண்டைக்
கொண்டிருக்க முடியாமல் கீழே போடச்
சண்டையிட்டப் பருத்தநாயோ அதனைக் கவ்வச்
சடுதியிலே தெருநாயை விட்டு விட்டுத்
துண்டெலும்பைக் கவ்வியுள்ள பெருத்த நாயைத்
துரத்தினவே நாய்களெல்லாம் மீண்டும் போர்தான்!
எலும்பதனைத் துறந்திட்ட நாயோ எந்த
எதிர்ப்புமின்றி நிம்மதியாய் நின்றதங்கே
எலும்பென்னும் ஆசையினை நெஞ்சில் பற்றி
ஏங்குவோரைத் தான்துன்பம் துரத்தித் தாக்கும்
எலும்புதனை விட்டநாய்போல் ஆசை விட்டே
ஏங்குவதை விட்டுவாழ நாம் முனைந்தால்
இலுப்பைப்பூ இனிப்பைப்போல் வாழ்வினிக்கும்
இனிமையான நிம்மதியும் வாழ்வில் பூக்கும்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.