ஒற்றைமரம்...!
இரவில்
உழன்று கொண்டே
பகலின் விடியலைக்
கனவு காண்கிறேன்...
பகற் கனவில்
இரவின் நிம்மதிக்கு
ஏங்குகிறேன்...!
கனவுகள் இலவசம்...!
நனவுகள்...?
தளிரும், இலையும்
பூவும், மொட்டும்
காயும், கனியும்
வாலிபப் பருவத்து
வசந்த காலம்...
சுமையானாலும்
பாரமாயில்லை...
இனிதாயிருந்தது
வாழ்க்கை..!
முதிர்வயது...
காயும் ஒற்றை மரம்...
சுமைகள் இல்லையென
ஒதுங்கி வாழ்ந்தாலும்
பாசமலர்களின்
நினைவுச் சுமையின் அழுத்தம்
நெஞ்சுக் கூட்டில்...
உறவுக் கிளைகளின்
அரவணைப்புக்காய்
நலிந்த இதயத்தில்
வேதனை விசும்பல்கள்...
பனித்திடும் கண்களில்
ஓரங்கட்டும்
சொந்த, பந்தங்களின்
இரத்தப் பாசம்...!
இலையுதிர் காலம்...!
சொர்க்கம் போக
ஆசைதான் - அதற்காக
இறந்து போக
விருப்பமில்லை...
நரகம் போக
ஆசையில்லை - அதனால்
உயிர்வாழத்
துடிக்கிறேன்...!
- பாளை.சுசி, திருநெல்வேலி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.