ஒன்றி வாழ்வோம்!
உலகத்தின் மறுகோடி நாட்டிலுள்ள
உருவந்தான் தெரியாத மனிதரோடே
உலகத்தில் நடந்திட்ட நிகழ்வைக் கேட்ட
ஊர்க்கதைகள் செய்திகளை விஞ்ஞானத்தின்
பலனாகக் கிடைத்திட்ட கருவி மூலம்
பலமணிகள் பேசுகின்ற நாமோநாவால்
நலந்தானா என அண்டை வீட்டிலுள்ளோர்
நலந்தன்னைக் கேட்பதற்கே நினைத்ததுண்டா!
பக்கத்தில் பெற்றோர்கள் அமர்ந்திருக்க
பக்கத்தில் உடன்பிறந்தோர் அமர்ந்திருக்க
பக்கத்தில் சுற்றத்தார் அமர்ந்திருக்க
பக்கத்தில் நண்பர்கள் அமர்ந்திருக்க
துக்கத்தை இன்பத்தைப் பகிர்ந்திடாமல்
தூரத்தே யாரிடத்தோ பேசிப்பேசித்
தக்கபல தொடர்பு கொளும் சாதனங்கள்
தனைப்பெற்றும் தொடர்பின்றி இருக்கின்றோம் நாம்!
வாய்ப்புகளும் வசதிகளும் பெருகப்பெருக
வகைவகையாய் அறிவியல்தான் வளர வளர
வாய்விட்டுப் பேசுதற்கும் நேரமின்றி
வளர்ந்திட்ட குடும்பத்துள் இருந்த போதும்
போய்ஒதுங்கித் தனித்திருக்கும் தீவைப் போல
பொழுதிற்கும் மனத்திற்குள் ஒதுங்கியுள்ளோம்
நாய்பெற்ற தெங்கம்போல் ஆகிடாமல்
நாம்ஒன்றி வாழ்ந்திடுவோம் முன்னோர் போன்றே!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.