ஒன்றே தீர்வு!
ஆண்டொன்றில் பலன்தன்னைக் காண வேண்டின்
அரும்வயலில் நெல்மணியை விதைக்க வேண்டும்
ஆண்டுபத்தில் பலன்தன்னைக் காண வேண்டின்
அருஞ்செடியை நிலந்தன்னில் நடுதல் வேண்டும்
ஆண்டுபல நூற்றாண்டு பலனைக் காண
அருங்கல்வி மக்களுக்கே ஊட்ட வேண்டும்
வேண்டுமிந்த கல்விதன்னை வணிகமாக்கி
வேண்டியோர்க்கு மட்டுமின்று கிடைத்தல் நன்றோ !
வயல்விதைப்பு ஒருமுறைதான் பலனைத் தந்து
வளர்ந்துபயிர் அறுவடைக்கு வளைந்து நிற்கும்
வயல்வரப்பில் நட்டசெடி வளர்ந்து பூத்து
வளைந்துகிளை பத்துமுறை கனிகள் ஈயும்
சுயஅறிவை ஊட்டுகின்ற கல்வி மட்டும்
சுடர்கதிராய் காலமெல்லாம் பலன் கொ டுக்கும்
சுயநலத்தால் இத்தகைய கல்வி தன்னை
சூழ்ந்துசிலர் தனியுடைமை ஆக்கல் நன்றோ !
கட்டாயக் கல்வியெனச் சட்டம் வந்தும்
கானல்நீர் ஏழையர்தம் குழந்தை கட்கே
எட்டாதக் கனியாகக் கல்வி தன்னை
ஏற்றிட்ட வஞ்சகத்தை வேரறுக்க
நட்டமரம் ஊர்நடுவே பொதுவாய் நின்று
நற்பலனை அனைவருக்கும் கொடுத்தல் போல
இட்டகல்வி பொதுவாக்கித் தனியார் பள்ளி
இல்லாமல் செய்வதுவே இதற்குத் தீர்வு!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.