இவர்தாம் அரசியல்வாதி!
மணல்தன்னைக் கயிறாகத் திரித்திக்காட்டி
மக்களினை மயங்க வைக்கும் வித்தகர்கள்
தணல்கங்கை விழுங்குவதாய் வாயுள்போட்டுத்
தம்மெதிரில் இருப்பவரை வியக்க வைப்பர்
மணமற்ற தாள்பூவும் மணக்குதென்றே
மற்றவரைச் சொல்ல வைக்கும் திறமையாளர்
குணக்குன்றே எனப்புகழ்ந்து பணிந்து நிற்கும்
கூட்டத்தைக் கொண்டிருக்கும் தலைமையாளர் !
நெருப்புதனை வைத்துவிட்டு அணைப்பதற்கே
நெஞ்சுருக ஓடிவரும் நடிப்பின் மேலோர்
கருணைமொழி பொழிந்தெதிரே இருப்போர் தம்மைக்
கடவுளென தொழவைக்கும் காட்சியாளர்
வருங்காலம் உங்களுடைகையில் என்றே
வந்தமர்ந்து பல்லக்கைத் தூக்க வைப்பர்
அருந்திட்டம் அறிக்கைகளில் அழகாய்க் காட்டி
ஆட்சியைப் பிடிக்கின்ற சொல்லின் செல்வர்
நாம்போடும் மேடையிலே நமக்காய் பேசி
நலனைமட்டும் தனக்கென்றே சுருட்டிக் கொள்வர்
நாம் கேட்கும் போதெல்லாம் செய்வோமென்றே
நம்மெதிரே நம்குருதி உறிஞ்சிக் கொள்வர்
ஆம் இவர்கள் அரசியல்வாதிகள் என்கின்ற
அரும்பெயரில் திரிகின்ற கொள்ளையர்கள்
பூம்பூம்பூம் மாடுகளாய் இருத்தல் விட்டுப்
புறப்படுவோம் அவர் வாயைக் கிழிப்பதற்கே!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.