ஏமாந்து போன கதை தெரியுமா?
காதறுந்த செருப்பைக்
கவனமாய்ப் பழுதுபார்க்க
ஏழைக் கிழவன் கேட்ட
இரண்டு ரூபாய்க் கூலியில்
ஜம்பது காசைக் குறைத்து
சாதனை படைத்ததாய்
ஜம்பம் பேசும்
ஜானகி அம்மாள்...!
காய்கறிக் கடையில்
கால் கிலோ
கத்தரிக்காய் வாங்கி
கால் ரூபாய்
விலை குறைப்புக்காய்
கால் மணி நேரம்
கடுந்தர்க்கம் செய்த
காமாட்சி அம்மாள்...!
ஒரு ரூபாய்க்
கீரைக் கட்டு
ஒன்று வாங்கி
ஒரு கை
ஓசிக் கொசுறுக்காய்
ஒரே மூச்சில்
ஒரு பாட்டு பாடும்
மேரி அக்காள்...!
பேரம் பேசும் இவர்கள்
இலாபம் அதிகமென்று
ஏமாற்றும் நிறுவனங்களிடம்
கட்டுக் கட்டாய்ப்
பணத்தைக் கட்டி
ஓடிப் போன அவர்களைத்
தேடி அலைந்தும்
கண்டுபிடிக்க முடியாமல்
ஏமாந்து போன கதை தெரியுமா?
- பாளை.சுசி, திருநெல்வேலி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.