அறிஞர் அண்ணா!

பூத்திட்ட புதுவெள்ளி புதுயு கத்தைப்
புலம்தன்னில் புதுக்கிட்ட விடியல்! மானம்
ஏத்திட்ட பெரும்புரட்சி ! ஏமாற் றத்தின்
ஏந்துகளை முடம்செய்த இறுதி ! வீழ்வைக்
காத்திட்ட புத்தெழுச்சி ! சோம்பி ருந்தோர்
கனல்கக்கிப் புறப்பட்ட உணர்ச்சி யெல்லாம்
கோத்திங்கே ஒன்றாக அறிஞர் அண்ணா
கோல்தந்த எழுத்தினிலே காண்கின் றோம்நாம் !
பொடிபோடும் பேரறிஞர் அண்ணா என்ன
பொடிபோட்டு எழுதினாரோ புரிய வில்லை
படித்துக்கொண் டேயிருந்தால் நாள்கள் போகும்
படித்தேனைக் குடித்ததுபோல் நாவி னிக்கும்
வெடியெழுத்தில் பொடிவைத்த கருத்துக் கோவை
வெற்றுச்சொல் ஏதுமில்லா வியக்கும் சிந்தை
அடித்தெழுத முடியாத அவரெ ழுத்தால்
அடிப்படையே மாறியது தமிழ கத்தில் !
வெற்றிலையின் கறைபடிந்த பற்கள் ஆயின்
வெல்கின்ற எழுத்தினிலே கறைக ளில்லை
நெற்றியிலே சிந்தனையின் வளைந்த கோடு
நக்கீர எழுத்தினிலே கோட்ட மில்லை
சுற்றிவந்த பகலிரவால் விழிகள் மூடும்
சுடரெழுத்தில் பொதிந்தபொருள் மூட லில்லை
சொற்களினைத் தீட்டுதற்கே விரல்கள் தாழும்
சொக்கவைக்கும் எழுத்தினிலே தாழ்வு இல்லை !
மரியாதை இல்லாமல் தமிழ ரெல்லாம்
மண்மீதில் நாய்போலப் பிறரின் காலைத்
தெரியாமல் நக்கிநக்கி இருந்த போது
தெளிவான சிந்தனையை ஊட்டி விட்ட
பெரியாரின் வழியினிலே எழுச்சி யூட்டும்
பெரும்புரட்சிக் கருத்துகளை எழுத்தில் தந்து
சரியான கொள்கைகளை ஏற்க வைத்த
சாட்டையடி எழுத்தாளர் அறிஞர் அண்ணா !
அண்ணாந்த வானம்போல் வாய்பி ளந்தே
அடிமையராய் வாழ்ந்திருந்த தமிழர்க் கெல்லாம்
விண்மீது உதித்தவர்கள் யாரு மில்லை
வினைஊழால் தாழ்ந்தவர்கள் யாரு மில்லை
எண்ணத்தில் பகுத்தறிவை ஏற்றி நீங்கள்
எழுந்திட்டால் ஏற்றதாழ்வு எல்லாம் மாறி
மண்ணகத்தில் சரிசமமாய் வாழ்வீர் என்றே
மாற்றத்தைச் செய்தவர்தாம் அறிஞர் அண்ணா !
பிற்போக்கில் இருந்திட்ட சமுதா யத்தின்
பிணிபோக்கத் திராவிடநா டென்னும் ஏட்டில்
அற்புதமாய்க் கட்டுரைகள் வடித்துத் தந்தும்
அரும்காஞ்சி நம்நாடு மாலை மணியில்
வெற்பென்னும் குடியரசு ஓம்லேண்ட் ஓம்ரூல்
விடுதலையாம் ஏடுகளில் ஓய்வே யின்றி
முற்போக்குச் சிந்தனைகள் குவித்து நாடு
முன்னேறச் செய்தவர்தாம் அறிஞர் அண்ணா !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.