பாரதி மேல் உறுதி ஏற்போம்!
சாதிகளின் வேரறுக்கத் தன்னுடம்பின்
சதிநூலை அறுத்தெறிந்தே பூணூல் தன்னை
ஆதிதிராவிடனென்னும் கனகலிங்க
அருந்தோழன் மார்பினிலே தானே போட்டு
வேதியர்கள் பறையரென்னும் வேறுபாட்டு
வெறிதன்னைப் போக்குகின்ற செயலைச் செய்து
சாதித்த புரட்சியாளன் பாரதி போல
சாதிக்க அவன்மீது உறுதி ஏற்போம்!
தெருவினிலே தமிழில்லை பள்ளி தன்னில்
தெள்ளுதமிழ் கல்வியில்லை தமிழர் பேச்சில்
அருந்தமிழின் சொற்களில்லை வீட்டில் கூட
அம்மாவென்னும் அமுதமொழி ஒலிக்கவில்லை
பெருகிவரும் தொலைக்காட்சி செய்தித்தாளில்
பெருமளவு தமிங்கிலந்தான் தமிழோ இல்லை
உருவாகியுள்ள இந்த இழிவைப் போக்க
உயர்கவிஞன் பாரதிமேல் உறுதி ஏற்போம்!
தண்ணீரால் வளர்க்காமல் கண்ணீர் ஊற்றித்
தழைக்கவைத்த சுதந்திரத்துப் பயிரையின்று
தன்வீட்டுப் பயிரென்றே ஆட்சி செய்வோர்
தன்னலத்தால் அறுக்கின்றார் என்ன செய்தோம்!
எண்ணற்ற நல்லோர்கள் குருதி சிந்தி
எழிலாக வளர்த்தளித்த சுதந்திரத்தில்
கண்முன்னே திருடுவோரைத் தட்டிக் கேட்கக்
கனல்கவிஞன் பாரதிமேல் உறுதி ஏற்போம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.