நட்பு
உயிர் கொடுத்த என் தந்தை
உருக்கொடுத்த அன்புத் தாய்
உடன் பிறந்த பிறப்புக்கள்
துணையாய் வரும் மனைவி
எங்களால் பிறந்த வாரிசுகள்
இத்தனை பேரும் நித்தமும்
உண்மை அன்பு செலுத்தினாலும்
அத்தனைக்கும் காரணம் உறவு
அதன் அடித்தளம் இரத்த பந்தம்.
எங்கோ பிறந்து வளர்ந்து
எனக்கொரு துன்பம் என்றால்
கண்கலங்கி காத்து நிற்பான்
உறவாயன்றி வரமாய் வந்த
அன்பு நிறைந்த என் நண்பன்
அவனிடம் உள்ளதே உண்மை நட்பு
கற்பைப் போல நட்பை எண்ணும்
பூவோடு சேர்ந்த நார் போலே
என்னை அவனே மணக்க வைப்பான்.
நட்பு என்பது பகிர்ந்தளித்தல்
நட்பு என்பது அன்பு செலுத்துதல்
நட்பு என்பது தோள் கொடுத்தல்
நட்பு என்பது துயர் துடைத்தல்
நட்பு என்பது உற்சாகம் தருவது
நட்பு என்பது உயர்வில் மகிழ்வது
இத்தனையும் செய்யும் நட்பு
நெருக்கடியில்லா ஒருவழிப் பாதையல்ல
நெருக்கமாய் நடக்கும் இருவழிப்பாதை !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.