குறுங்கவிதைகள்
ஆடை அவிழ்த்தவளை
அழவைத்தாள்...
வெங்காயம்.
*****
இரு முட்கள் நடுவில்
ஒரு சிதைந்த ரோஜா
சிலுவையில் ஏசு...!
*****
தலைகீழாய்த் தொங்கிதான்
தரை பார்க்க வேண்டுமா?
தலையெழுத்து வௌவாலுக்கு...!
*****
வளர்ப்புத்தாய் வீட்டில்
குயில் குஞ்சுகள்
காக்கா கூடு...!
*****
குடிநீர்க் குழாயில்
சொட்டுச் சொட்டாய்
கலங்கல் கண்ணீர்...!
*****
வைக்கோல் கன்றுக்காய்
பசு மடுத்த பால்
குழந்தைக்குத் தாய்ப்பால்...!
*****
ஆகாயத்தில் வலைபின்னி
அசையாது காத்திருக்கும்
அழகான சிலந்தி...!
*****
முதியவர் இறப்பில்
முதலைக் கண்ணீரோடு சிலர்
சொத்தில் பங்கு வேண்டி...!
*****
கொல்லர் தெருவில்
நரிக்குறவர்
ஊசி விற்கிறார்...!
*****
அப்பா ஆசிரியர்
அம்மா ஆசிரியை
மகன் படிப்பு மையத்தில்...!
*****
ஆடுகளைச் சுரண்டாதீர்...
நல்ல ஆயன்
ஆடுகளைப் பாதுகாக்கிறான்...!
*****
மலர்களை விரும்பினால்
வேர்களைப் பாதுகாப்போம்...!
*****
எந்தக் குடையும்
மழைநீர் சேகரிப்பதில்லை...
சோகத்தைத் தொலைப்போம்...!
- பாளை.சுசி, திருநெல்வேலி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.