கடவுளிடம் ஒரு விண்ணப்பம்

கடவுளே! பூமியில் மனிதாக
பிறக்க விண்ணப்பித்திருந்தேன்
நீயும் செவிசாய்த்தாய்!
கருவறைக்குள் உதித்தேன்
கருவாக
எல்லாம் கிடைத்து
எனக்குதொப்பூள் கொடி மூலம்
வெளிச்சத்தைத் தவிர...
வெளிச்சத்தைத் தேடி
பூமியில் பிறந்தேன் மனுஷியாக
பதவிக்காக பாமரர்களையும்
உறிஞ்சும் ஆற்றல்மிகு
அட்டை அரசியல்வாதிகள்
மதமெனும் பெயரால்
மானிட சமுதாயத்தை
அரக்கர் மனிதநேயமற்றவர்களாக உருமாற்றும்
இராசாயன வித்தையறிந்த மதவாதிகள்
பருவம் எய்தாத
பாலச் சிறுமியர்களை
பாலியல் பலாத்காரம் புரியும்
கல்விக்கூட நிர்வாகிகள்
‘ஒருவனுக்குஒருத்தி’என முறுக்கிய
பண்பாட்டு தேசத்தில்
சுயதேவைக்காக விலைமகளாகும்
விசித்திரக் கல்லூரி மாணவிகள்
அகிம்சைக்குப் பேர் போன
அன்புமிகு தேசத்தில்
வெட்டவெட்ட முளைக்கும்
தீரம்மிகு தீவிரவாதிகள்
நிலத்தில் நிர்வாணத்திற்கு
பசும்பட்டு உடுத்தும்
விவசாயிகளை
நிர்வாணமாக்கும் அதிகாரவர்க்கம்
இன்னும் எத்தனை எத்தனையோ
கண்ணைச் சிவக்கச் செய்யும்
மக்கள் கூட்டம்
விரும்பிய வெளிச்சம் நிதர்சனத்தைக்
காட்டியதால் கூசின கண்கள்
துடித்தன இதயம்
மனித இனத்தைப் படைத்த
இறைவனே! நீ படைத்த
இவ்வுலகைக் கண்டு
கிருஷ்ண பரமாத்துமாவாக
இயேசுவாக
அல்லாவாக வேண்டாம்
பிறவியெடுக்க
மனிதர்களை மனிதர்களாக்கி
வெளிச்சத்திற்குக் கொண்டு வா
இல்லையேல் ரௌத்திரம் கொண்டு
உலகினையே இருட்டாக்கு
நீ படைத்த இயற்கை
துன்புறுத்தாத துணிச்சலான மிருகங்கள்
எதனையும் தாங்கும் நிலம்
நிறைவான நீண்ட நீர்நிலைகள்
இவற்றால் சொர்க்கமாக்கு
இவ்வலகினை!
மனிதனாகப் பிறவியெடுக்க வரம் நல்கிய
இறைவா!
உலகநன்மைக்காக
இவ்வரத்தினையும் எனக்கு நல்வாயாக!
- முனைவர் ம. தேவகி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.