திசைகாட்டும் நூலே திருக்குறள்
உலகத்தின் பன்மொழியில் மொழிபெயர்ந்த
உயர்நூலாம் பைபிளுக்கும் முந்தை நூலாம்
உலகமொழி எனப்பேசும் ஆங்கிலந்தான்
உருவாகும் முன்தோன்றி நிற்கும் நூலாம்
உலகத்தின் எப்பகுதி வாழுவோரும்
உருப்படவே உயர்கருத்தை உரைக்கும் நூலாம்
நிலவுகின்ற சாதிமதம் கடவுளென்ற
நிறமில்லா பொதுமறையாய் இலங்கும் நூலாம்!
மனிதநேயம் உலகநேயம் பேசுகின்ற
மணியான கருத்துடைய மாண்பு நூலாம்
தனிமனித ஒழுக்கத்தைத் தகைமை தன்னைத்
தரைதன்னில் முதன்முதலில் சொன்ன நூலாம்
புனிதநூலாம் திருக்குர்ரான் பிறக்கு முன்னே
புவிநடக்க வழியுரைத்த புனித நூலாம்
இனியொருநூல் இதுபோல இல்லையென்றே
இவ்வுலகோர் மொழிகின்ற குறளே அந்நூல்!
முக்காலம் ஏற்கின்ற முப்பாலைப்போல்
முதன்மையான நூலெந்த மொழியிலுண்டு
எக்கால வாழ்விற்கும் ஏற்ற நல்ல
எழிற்கருத்தைச் சொல்லும் நூல் வேறெங்குண்டு
இக்கால புதுமையையும் உள்ளடக்கி
இனியவழி காட்டும்நூல் பிறிதொன்றுண்டோ
திக்கெட்டை ஈரடிக்குள் அடக்கிச் செல்லும்
திசைகாட்டும் திருக்குறளே அந்த நூலாம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.