ஏக்கக் காட்சி
அரைக்கால் சட்டையுடன்
அடுத்தவீட்டுச் சிறுவருடன்
உரையாடி நடந்து பள்ளிக்கு
உளம் மகிழச் சென்ற நாள்கள் !
பள்ளிநுழை வாயில்முன்
படர்ந்தமர நிழலின்கீழ்
நெல்லிக்காய் கூறுகட்டி
நிலம்மீது அமர்ந்தபடி !
வறுத்த நிலக்கடலையொடு
வறுக்காத நாவற்பழம்
சுருக்குப்பை பாட்டிவிற்க
சுவையாக உண்ட நாள்கள் !
மிட்டாயில் கடிகாரம்
மிடுக்காய்க் கையில்கட்டி
கெட்டியான கமர்கட்டைக்
கேட்காத நண்பனுக்கும் !
காக்காகடி கடித்தளித்துக்
கரம்கோர்த்து நின்றதெல்லாம்
ஏக்கத்தை நெஞ்சிற்குள்
ஏற்றியது; பேருந்தில் !
பூட்டிவிட்ட சீருடையில்
புத்தகங்கள் பொதிசுமந்து
போட்டடைத்த பொட்டலமாய்ப்
பேரன்தான் சென்ற காட்சி !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.