இரக்கமுள்ள அரசு
வயல்சூழ்ந்த இயற்கையெழில் கொஞ்சும் சிற்றூர்
வாய்க்காலில் நீரோடி செழிக்கும் சிற்றூர்
வயதுமுதிர் நீண்டுயர்ந்த மரங்களோடு
வான்முட்டக் கல்மலைதான் நிற்கும் சிற்றூர்
துயர்வந்த போதுவொன்றாய்க் கூடி நின்று
துடிதுடித்து உதவுசுற்றம் நிறைந்த சிற்றூர்
அயலூரில் முளைத்திட்ட நாகரீக
அழிவுஎட்டிப் பார்க்காத அருமை சிற்றூர்!
படிப்பதற்குச் சிறுவரெல்லாம் பள்ளிக்கூடம்
பக்கமுள்ள ஊருக்கே போக வேண்டும்
வடிப்பதற்கே இலவசமாய் அரிசி வாங்க
வாய்த்தகடை மூன்றுகற்கள் செல்ல வேண்டும்
அடிப்பட்டால் நோய்வந்தால் மருந்து வாங்க
அலறிநான்கு கல்தொலைவு ஓட வேண்டும்
குடிசைகள்தாம் பேருந்து வசதியில்லா
குக்கிராமம் யாருக்கும் தெரியா சிற்றூர்!
மந்திரிக்கு விண்ணப்பம் பலகொடுத்தும்
மாவட்ட ஆட்சியரைப் பார்த்து வந்தும்
இந்தஊரை வந்துயாரும் பார்க்கவில்லை
இருப்பவரை மக்களாக நினைக்கவில்லை
எந்தவொரு வசதியுமே இல்லா ஊர்தான்
எப்படியோ இனிப்பறியும் எறும்பைப் போல
முந்திவந்து கேட்பதற்கு முன்பே அரசு
முனைந்துவந்து திறந்ததுவே மதுவின் கடையை!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.