சுமைதாங்கி!
தன் கஷ்டங்களை மறைத்து
இஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்த
அன்னை தந்தை சுமைதாங்கி
அன்னை தந்தையைக் கண்ணாய்க்
காத்து வளர்த்து அழகு பார்த்த
தாத்தா பாட்டி அவர்கள் சுமைதாங்கி
நம் கஷ்டத்தைப் பங்கு போடும்
உடன் பிறப்புக்கள் சுமைதாங்கி
நம் கஷ்டத்தை தனதாக்கி
ஓடி வந்து உதவுகின்ற
நண்பர்கள் சுமைதாங்கி
தலைச்சுமை சுமப்போர்க்கு
உதவும் கல் சுமைதாங்கி
நாகரீகம் வளர்ந்த பின்னே
நினைவை விட்டுப் போனது
சுமைதாங்கிக் கல் மட்டுமல்ல
ரத்தமும் சதையுமாய் நமக்கு
நித்தமும் உதவி வந்த
உயிருள்ள சுமைதாங்கிகளும் தான்
சுமைதாங்கிக் கல் இன்று
பயனின்றி ரோட்டோரம்
உயிருள்ள சுமைதாங்கிகள்
ஓரங்கட்டப்பட்டவர்களாய்
வீட்டிலும் வெளியிலும்...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.