பயந்தாங்கொள்ளி வாழ்க்கை!
ஓடித்திரியும் சிறிய வயதில்
பார்ப்பதெல்லாம் பயமுறுத்தின...
விவரம் புரியா நிலையில்
விளங்காதவற்றைக் கண்டு பயம்
விவரம் புரியும்வரை –
பெற்றோர், சாமி,
பேய் பிசாசுக்கும்
காத்துக் கருப்பிற்கும் பயம்...
சற்றே நின்று யோசிக்கத் தெரிந்து
வாழ்க்கையில் விவரம் கொஞ்சம்
புரிந்தபின் -
தேர்வுக்கும் மதிப்பெண்ணுக்கும்
சொல்ல முடியா பயம்...
படித்து முடித்து பட்டம் பெற்றபின்
இட ஒதுக்கீட்டுக்கும்,
ஓடும் வயதுக்கும், வேலை வாய்ப்புக்கும்
பயந்து பயந்து ஓடியது வாழ்க்கை...
அனைத்தும் வாய்த்த பின்-
வாழ்க்கை என்ற நாடக மேடையில்
கிடைத்த வேடங்களுக்கும்,
நடித்த வேடங்களுக்கும்
ஒவ்வொரு நாளும் பயந்து
பயந்து பயந்தே வாழ்க்கை
என்றும் ஓட்டமாய் ஓடியது...
அனைத்தையும் துரத்தி
துரத்தித் துரத்தி எல்லாம்
ஓய்ந்த பின் -
ஓய்விற்குப் பின்னர் இருக்கும்
வாழ்க்கையை நோக்க நோக்க
வயிற்றுக்குள் பயம் புளியைக் கரைத்தது...
உடம்பில் இரத்தம் சுண்டிய பின்னர்
அனைத்திற்கும் ஒருவரை அண்டி நிற்கும்
நிலையில் ஆதரிக்கும் மக்களைப்
பார்த்துப் பார்த்துப் பயமும் வந்தது...!
மக்களிடம் உள்ள பயமும் தெளிந்தபின்
எப்போது வரும்...?
எப்படி வரும்? எந்நிலையில் வரும்?
எந்நிலையில் இருக்கும்?
இரவிலா? பகலிலா? என்று
நினைத்து நினைத்து
உள்ளம் நடுங்கி உயிரும் நடுங்கி
வரப்போகும் மரணத்தைக் கண்டு
நாளெல்லாம் பயம்...
வாழ்வில் செய்த நன்மைக்கும் தீமைக்கும்
மரண வாயிலில் நின்று கொண்டு
கணக்குப் பதிவேட்டைப் பார்த்துக் கொண்டு
கணக்கைப் பார்த்துத்
தண்டனை வழங்கக்
காத்திருக்கும் கடவுளை
நினைத்து நினைத்துப்
பயந்து பயந்தே முடிந்துபோனது - இந்தப்
பாழாய்ப் போன
பயந்தாங் கொள்ளி வாழ்க்கை...!
பிறப்புத் தேதி தெரிவது போன்று
இறப்புத் தேதியும் தெரிந்து விட்டால்
இத்தனை ஆட்டமும் இப்படி நடக்குமா?
இத்தனை கொள்ளையும் நாளும் நடக்குமா?
மனிதனை மனிதன் சுரண்டும் வாழ்க்கை
மடிந்தே மனிதம் வாழும் அன்றோ?
பயந்த மனிதன் பக்குவமடைகிறான்...
தவறிலிருந்து விலகிச் செல்கிறான்...!
தண்டனை நிச்சயம் உண்டு என்றிடில்
தவறுகள் செய்ய தயங்கி நிற்கிறான்...
மரணத்தேதி தெரிந்து விட்டாலோ
மண்ணில் தவறுகள் குறைந்திடும் அன்றோ?
பொய்யும் களவும் நிறைந்த வாழ்க்கை
மெய்யாய் நிறைந்து உயர்ந்திடும் அன்றோ?
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.