அந்தப் பேருந்தில்...!

நான் பயணம் செய்த
அந்தப் பேருந்தில்
அந்தக் கயல் விழிகள்
என்னை உற்று நோக்க
சற்று தடுமாறினேன்...
கல்லூரிப் பருவத்தில்
அந்த விழிகள் என்
அகத்திற்குச் சொந்தமானவை.
இன்று அவள்
இடுப்பில் ஒன்றும்
கைப்பிடியில் ஒன்றுமாய்க்
குழந்தைகளைச் சுமந்து
நிற்கும் மாற்றான்
தோட்டத்து மல்லிகை
வாழ்க்கைப் பயணத்தில்
ஒரு இடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு
வேகமாக மாறிக் கொண்டாள்.
கூட்ட நெரிசல் அவளை
பின்னுக்குத் தள்ளியது
முன்பின் முகம் பார்த்திராத
அவள் முதல் குழந்தை
என்னைப் பார்த்துச் சிரித்தது
மனதை வருடியது...
அவளோ
அலட்சியப் பார்வையில்
முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அன்று
பெற்றோர் சொல்லில்
காதலைக் கை கழுவியவள்,
என் முகவரி தொலையக்
காரணமானவள்.
இன்று அவள்
புன்முறுவல் காட்டக்
கூட மறுக்கிறாள்.
காதல் எனும் ஆட்டத்தில்
இடையில்
சென்று விட்டவள்
நான்
முதல் காதல்,
முதல் பரிசம்
என்று மறக்க முடியாமல்
தவிக்கின்றேன்.
மனையாள் தேடுவதைக்
கூடத் தவிர்க்கின்றேன்...
அவள்
இறங்குமிடம்
இதோ வந்துவிட்டது.
இறங்கும்போது
முகம் பார்ப்பாள்
புன்னகைப்பாள்
என்று எதிர்பார்ப்பில்
ஏமாற்றமே எனக்கு...
கனத்த இதயத்துடன்
காதல் நினைவுகளுடன்
என் பயணம் தொடர்ந்தது
அந்தப் பேருந்தில்...
- முனைவர் ஜெ.ரஞ்சனி, ஸ்ரீரங்கம், திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.