வழியொன்று தேடுகிறேன்...
வளி கொண்ட உலகமெலாம் நடந்து
“வழி”யற்ற உள்ளங்களைப் பார்த்தேன் -
வலித்தது...
வலியிலாத உள்ளங்கள் வாழும்
உலகமெங்கே தேடிப்பார்த்தேன் -
“வெளி”களில் கண்டேன்...!
அண்டமெல்லாம் மின்னும்
நட்சத்திரங்கள் அருகிலே
ஓருலகாவது இருக்கலாம்...
அங்கே -
மனிதன் போன்றோ வேறோ
பல்லுயிரினங்கள் உலவலாம்...
நெருங்கி வரும் நதிகளில்
தேன் பாயலாம்...
நெருங்காமல் வெப்பமெல்லாம்
தணிந்திடலாம்...
எட்டும் திசையெல்லாம்
களி கொள்ளலாம்...
ஒளிக்குக் கிட்டும் கதிகளில்
நாம் செல்லலாம்...
தொலைவு வெளி காலமெல்லாம்
சுருங்கிடலாம்...
தொல்லை கொள்ளை களவில்லாமல்
வாழ்ந்திடலாம்...
எண்ணாத காட்சிகள் தோன்றிடலாம்...
நாம்
எண்ணியது உடனேயே நடந்திடலாம்...
மண்ணுலகில் காணாத மாயம்
அங்கெல்லாம் உண்டென்றால்
அங்கு மட்டும் வாழ்க்கை
வலிக்காது சலிக்காது நிலைத்தோங்கும்!
வழியற்ற உள்ளங்களை ஆங்கனுப்ப
வழியொன்று தேடுகிறேன்...!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.