மதமாற்றம் ஏமாற்றமே!
மதமாற்றம் நடப்பதாலே மனிதர்க் குள்ளே
மனம்மாறிச் சமதர்மம் வந்த துண்டா
மதமாற்றம் நடப்பதாலே சாதி இல்லா
மனிதனாக மனிதனையே ஏற்ற துண்டா
மதமாற்றம் நடப்பதாலே கீழ்மை நீங்கி
மனமொன்றிக் கரங்கள்தாம் இணைந்த துண்டா
மதமாற்றம் நடப்பதாலே மாற்றம் வந்து
மனங்களுக்குள் மனிதம்தாம் பூத்த துண்டா!
அயல்மதங்கள் பெருமைதரும் என்றே எண்ணி
அடுத்தமதம் மாறியிங்கு சென்ற வர்கள்
வயல்தன்னை வீட்டுமனை ஆக்கி நல்ல
வாழ்வுவரும் எனவளத்தைத் தொலைத்த போல
பெயர்மாறிப் புதுப்பெயர்தான் வந்த தன்றிப்
பெருமாற்றம் வாழ்வினிலே வந்த தில்லை
மயல்கொண்டு இருந்ததையும் இழந்த தன்றி
மதமாற்றம் வேறெதையும் தந்த தில்லை!
இக்கரைக்கு அக்கரைதான் பச்சை யென்றே
இயல்புமாறிச் சென்றவர்கள் கண்ட தென்ன
தக்கபடி மதிப்பொன்றும் கிடைக்க வில்லை
தகுதிதனை உயர்த்தியாரும் கொடுக்க வில்லை
மக்கள்தம் மனங்களினை மாற்றி டாமல்
மதமாற்றம் மாற்றத்தைத் தருவ தில்லை
எக்காலம் ஆனாலும் மதத்திற் குள்ளே
ஏற்றமாற்றம் செய்தால்தான் பொதுமை பூக்கும்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.