மாற்றானுக்குக் கையளிக்காதே!
தனக்கென இயக்கம் வர
பூமி தொடும் உயிரினம்
தனக்கான வாழ்வியலை
தனித்துவமாக்க முடியுமென
தகவல் பகிருது-ஆனால்
காலம் காலமாகக்
கைகொடுக்கும் வாழ்வியலுக்கு
பழக்கப்பட்ட மனிதவினம்
மாற்றானைத் தங்கி
மழுங்கப்பட்ட மூளையுடன்
இழுபறி வாழ்வியலை
இருப்பவனுக்கும்
இல்லாதவனுக்கும்
பரிசளிப்பதில்
பரவசமாவது எதனால்?
நான் நான்...
என நயனம் பாடும் மனிதா!
தேவை வருகையில்
மற்றவர் கையை
தேடியலைவது ஏன்?
ஐந்தறிவு மிருகம்போல
வாழ்!
அல்லது
ஆறறிவில் அறிவோடு
வாழ்!
மாறாக மரத்த மனிதவினமாக
மறந்தும்
வாழ்வியலை
மாற்றானுக்குக் கையளிக்காதே!
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.