அடிமாடோ...?
அடித்த அலாரம்
அடங்கும் முன்னே
அடுப்பங்கரையில்
அடிதடியில் அவள்
சிந்திய பால்
விரலைச் சுட்டாலும்
கொட்டிய சீனி
சரியாக வேண்டும்
இல்லையென்றால்
மல்லாக்கப் படுத்திருக்கும்
கணவனின்,
ஏய்! சனியனேயென்ற
ஏளனச்சொல் எட்டு வீடு கேட்கும்
ஓடியோடி ஒலிம்பிக் பெண்ணாய்
ஓராயிரம் வேலைகள்
ஒன்பதே மணிக்குள்
ஒற்றையாளாய் முடித்தவள்
உட்கார்ந்த அலுவலகத்தில்
உருவங்கள் யாவும்
நிழலாகவேத் தெரிந்தன
துப்பட்டாவால் துளிர்த்த
வியர்வையொற்றி
கணினியில் கண் பதித்தாள்
கண்ணுக்குள் கண்ணீரை மறைத்து
அரைகுறை உணவுண்டு
அவசரமான இயற்கை உபாதையை
அடக்கிக் கொண்டே
ஆறு மணிக்குள் அலுவல் முடித்து
அவசரமாகப் பேருந்து பிடித்து
அரக்கபரக்க வீடு வந்து
அரவணைத்த குழந்தைகளை
ஆறுதலாக அரவணைத்துப்
பாடங்கள் சொல்லிக் கொடுக்கையில்
பாதிவிழிகள் பரிதாபமாக
மூடத்தொடங்க...
முணுமுணுத்துக் கொண்டே
வீடு புகுந்த அவன்
விளங்காத சமையலென்று
வீராப்புக் கதை சொல்லி
சூடான காப்பி
கொண்டு வாவென்று!
சொல்லிக் கொண்டே ...
சொகுசாக உட்கார்ந்து
மட்டைப் பந்தாட்டத்தில்
மூழ்கிப் போனான்
சோர்ந்த உடம்புக்கு
விழுங்கிய எச்சிலை
சக்தியாகக் கொடுத்து
சத்தமேயில்லாமல்
அடுக்களையில்
தஞ்சமானாள் மீண்டும்
சூடான தோசை இரண்டு
வெங்காயத் தோசை ஒன்று
விதவிதமான தோசைகள்
வீட்டினருக்குச் சுட்டுப் போட்டபடி
சுருண்ட வயிற்றை
சுருக்கிக் கொண்டாள்
வேண்டாய் வெறுப்பாய்
தொண்டைக் குழியில்
உணவிறங்குகையில்
தோளில் தொங்கிய
இரு குழந்தைகள்
கண்களைக் கசக்கிக் கொண்டே
கதை சொல்லம்மா
என்றன
எட்டியே பார்த்தாள்
பஞ்சு மெத்தையில் சாய்ந்து கொண்டு
மடிக்கணினியில் அவன்...
விருட்டென எழுந்து
குழந்தைக் கதை கூறி
முடிக்கு முன்னே
குழந்தையாக மாறியது
அவள் கண்கள்
ஆசையாக அழைத்த
அலமேலு... குரலின்
அர்த்தம் புரிந்து
அமைதியாக அறையுள்
சென்று கதவைச் சாத்தியவள்
மரத்தபிணமாக
மனதளவில்...
தேவைகள் தீர்ந்தவுடன்
திரும்பிப் படுத்தவன்
ஆணாகத் தூங்கினான்
துளிர்த்த வியர்வையைத்
துடைத்தபடியே
சோர்ந்த காலுடன்
அடுக்களை சென்றவள்
பாத்திரம் சுத்தமாக்கி
நாளைய சமையலைத் திட்டமிட்டு
அழுக்கான உடைகளைத் தரம் பிரித்து
அலுவலக வேலைகளைத் தரப்படுத்தி
ஆசைக் குழந்தைகளின்
பள்ளிப்பையைச் சோதனை செய்து
குளிர்ந்த நீரின் கீழே
நின்று கொண்டே
குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டே
அமைதியாகத் தனக்குள்
கேட்டாள்...
மனிதம் இல்லா
மனிதரில் பிறந்தேனோ
கலாச்சாரச் சகதியில்
கடமையும் இதுவோ
காலமாற்றத்தில் காரிகை
நானும் மாறின்
வழிதவறிய பேதையோ
வழிவழியாகப் பெண்
வாழ்வளித்தவனின்
அடிமாடோ...!
பாடிவிட்டுச் சென்ற பாரதியே...!
பாவிகள் நாம்
படும்பாடு மாறவில்லையே...
ஆனாலும்
சொல்கின்றனர்
"மாதராகப் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்."
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.