சமத்துவமே மகத்துவம் !
எத்தனை இனங்கள், எத்தனை மொழிகள்,
எத்தனை மதங்கள், எத்தனை ஏற்றத்தாழ்வுகள்
அத்தனை இருந்தும் ஒற்றுமையாய் நாம்!
இத்தனைக்கும் காரணம் சமத்துவமே...!
பாரதி பாட்டில் சொன்ன சமத்துவம்!
பாரதத்தையே ஒன்றாய் இணைக்கும் சமத்துவம்!!
சிவப்பு ரத்தம் உடலில் பாய
மூச்சுவிடும் மனிதர் எல்லாம்
ஒன்றே என உரக்கச் சொன்ன
உயர்ந்த தத்துவம் சமத்துவமே...!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென
அன்றே வள்ளுவர் சொன்ன சமத்துவம்!!
பலவண்ணப் பூக்கள் தனியே இருந்தால்
உதிரி எனவே உதாசீனம் செய்வார்
அந்தப் பூக்கள் அனைத்துமே
அழகாய் நாறால் தொடுத்திட்டால்
கதம்பமாய் மாறிக் கண்ணைக் கவரும்
இந்த உண்மையை உணர்த்தும் சமத்துவம்!!
கீதையைப் வாசிக்கும் இந்துவும்
குரானை ஓதும் இசுலாமியரும்
பைபிளை நேசிக்கும் கிறித்தவரும்
மதத்தை மறந்து மனதால் இணைந்து
நாடும் நாமும் மகிழச் செய்ய
ஏற்படும் ஒற்றுமையே சமத்துவம்!!
குமரி முதல் இமயம் வரை
இருக்கும் அனைவரும் சுவாசிக்கும் மூச்சு
இந்தியர் என்ற உணர்வு என்பதால்
எந்தச் சண்டையும் இனியிங்கு இல்லை
ஒற்றுமையாய் வாழ வழி செய்யும்
சமத்துவமே நம் மகத்துவம்!!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.