சாதிக் காட்டேறி...
சாதிக்கத் துடிக்கும்
சாதனையாளனையும்
சாவுமணியடித்து
சத்தமில்லாமல் நிற்கச்சொல்லும்
சக்தி சாதிக்குண்டு
சாமியும் ஆசாமியாகி
சாத்திரங்களும் வேதங்களும்
சத்தமில்லா ஓலமிடும்
சாதியபூமி
இந்தப் பாரதபூமி
ஏழேழுமலையேறி
ஏங்கித்தவமிருந்து
தாங்கித்தரணியில்
பெற்றுவிட்ட பிள்ளைகளையும்
சாதிக்காட்டேறி
சலனமேயில்லாமல்
பலிகொடுக்கும்
பாலூட்டியவர் கையாலே
ஏட்டிக்குப் போட்டி
எகாத்தளப் பேச்சு
மூட்டிய அடுப்பில்
தீவளர்க்க திராணியற்ற
பிறப்பு
ஆனாலும் சாதிக்கதை பேசி
சாத்தானை
சத்தமேயில்லாமல் முடக்கிவிட்டு
சலனமேயில்லாமல் துண்டையுதறி
தோளிலே போட்டுவிட்டு
சொல்லிச் செல்கிறது
என்ன சாதியோ போங்க...
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.