மானிடக் கணக்கு!
புரட்டிப்புரட்டிப் பார்த்த போதும்
புரியவில்லை மானிடரின்
கணக்கு
பிறக்கும் முன்பே கணக்கு
பிறந்த பின்பும் பல கணக்கு
கூட்டலாகப் பணம் மாறுகையில்
கூடியவர் கணக்குக்குக் குறையில்லை
நல்லதையும் நாலுமடங்காகப்
பெருக்கியே சொல்வர்
நட்பென்ற பெயரில் நம்மையே நாடுவர்
நயமாகப்பேசி தலைகுனிவர்
நமக்காக உயிரையும் தாரைவார்ப்பர்
கூட்டி வைத்த பணம்
கண்முன்னே கழிந்துபோகையில்
கண்ணெதிரே நின்றவர் மாயமாவார்
கைபிடித்தவர் வலிக்குமென்பர்
கண்களையும் மூடிச்செல்வர்
கதைகளைக் குறைத்துச் செல்வர்
ஏளனப் பார்வைகளில் எதிரே நிற்பர்
எண்ணில்லா வசைகளை கொட்டியும் தீர்ப்பர்
ஓடியே ஒடுங்காத ஒர்மநெஞ்சன்
பெருக்கிச் செல்லும் முயற்சியில்
பெயரினைப் பதிவாக்கி
பெரியவனாக உயர்கையில்!
மீண்டும் புரியவில்லை
புரட்டிப் பார்த்த மானிடக் கணக்கு...
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.