காலத்தின் கடனாளிகள்
என்ன உலகமடிதோழி
எட்டிக்கையைப் பிடித்து
கிட்டணைத்துவைத்து
அன்பைப் பரிமாறிய
நட்பு...
அன்பைப் பொய்யென்று கூறி
அழுகையை வரமாக்குது
எல்லோரையும் மயக்கும்
பெண்ணாகக் குற்றம் சாட்டி
குறுகவைத்துக் கேள்வி கேட்குது
ஏமாளியாயிருக்கச் சொல்லுது
கோழையாக மாறச் சொல்லுது
பேதையாக வாழச் சொல்லுது
பேச்சற்ற ஊமையாக உலாவச் சொல்லுது
வாழப்பழகியதை
வாழ மறுத்து
வாழ்வேயல்லாத வாழ்வியலை
வாழவாவெனக் கையை நீட்டுது
தொட்டுவிட்ட பாவத்துக்காக
துவண்டுவிட்டேன்
துடித்துவிட்டேன்
கொட்டிய நீரும்
விட்ட மூச்சும்
காலத்துக்கும் மாறாத வடுவடி
கனவாக நானும் மறக்க
அவனும் மறக்க
நாமொன்றும் கடவுள் இல்லையே
காலத்தின் கடனாளிகள்
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.