கையேந்தி உணவகங்கள்
தெருவோர உணவகத்தில் கையை ஏந்தி
தெரிந்திருந்தும் அனைவருமே உண்கின்றார்கள்
வருவாயில் குறைந்தவர்கள் ஏழையர்கள்
வாழ்க்கைத்துணை இல்லாத ஆண்கள் பெண்கள்
திருமணந்தான் ஆனவர்கள் பணிநிமித்தம்
திரிந்துவேறு ஊர்களிலே தங்கியிருப்போர்
அருகினிலும் விலைகுறைந்தும் இருப்பதாலே
அவசரமாய் உண்பதற்கே செல்கின்றார்கள் !
பத்துரூபாய் கொடுத்தாலே இரண்டு இட்லி
பலவகையாய் சட்னிகளைச் சாம்பாரோடும்
பத்திரண்டில் சாப்பாடு குழம்பு மோரில்
பகலுணவு தருகின்றார் பொரியலோடும் !
மெத்தகல்வி படித்தவரும் படிக்காதோரும்
மேட்டுகுடி நடுத்தரத்துக் குடும்பத்தாரும்
சித்தத்தில் கடையிருக்கும் இடமெண்ணாமல்
சில்லறையை மட்டுமிங்கே கணக்கு பார்ப்பர் !
சாலையோரக் கழிப்பிடங்கள் குப்பைமேடு
சாக்கடையின் அருகில்தாம் கடையிருக்கும்
காலைமுதல் ஒருகுடத்து அழுக்கு நீரில்
கழுவிடுவர் தட்டுகளை ஈக்கள் மொய்க்கும்
மாலைவரை காய்ந்தஅந்த எண்ணெய் தன்னில்
மறுபடியும் மறுபடியும் சமையல் செய்வர்
ஓலையினை எமன்கையில் வாங்குதற்கே
ஓடுவது போலாகும் எண்ணிப் பார்ப்பீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.