மரணித்தும் வாழ்கிறார்
உறக்கம் தொலைத்து
உணவூட்டிக்
கைபிடித்துப்
பாடம் சொல்லிக்
கதைபேசிச்
சிரிக்கவைத்த தந்தை!
கண்முன்னே
காலவோட்டத்தில்
கால்கள் தடுமாறிய
மனிதனாக...
கடனாளியாகக்
குடிகாரனாக
ஏக்கம் சுமந்த
கண்களுடன்...
வாழ்வைத் தொலைத்த
வெறுமையுடன்
வழிதவறிய தந்தை!
ஒரு கூரையினுள்
ஒளி சிந்திய
நாட்களை
நானறியேன்
பயந்த விழியுடன்
பரிதாபமாகத் தாயை
நோக்கிய நாட்கள்
இன்னும் என்னுள்
ஏட்டிக்குப்போட்டியாக
கடன்சுமை
தவணைகள் தப்பாகையில்
வாசலில் காவலராகப்
புதுமுகக் கடனாளிகள்
தினம்தினம்
கதறியழும் தாய்
பதிலறியா
மங்கையாக நான்
படிக்கும் வயசில்
குழந்தைத்தொழிலாளியாக
தம்பி
பல பொய்களைப்
பல விதமாகச் சொல்லி
நாட்களைக் கடத்திய
தந்தையின்
நாடகம் கலைகையில்
கழுத்துக்குக் குறி
பலிகடாவாகப்
பயணப்பையில்
பாவை நானும்
நாடு கடத்தப்பட்டேன்
வந்த இடத்தில்
விழியற்றவளாக
விக்கித்து நின்றேன்
விறைத்த மனதுடன்
என்னைத் தொலைத்து
கடனைத் தொலைத்தேன்
கட்டடம் உயர்த்தினேன்
கண்டவர் வியக்க வைத்தேன்
ஆனாலும்
பல கேள்விகளைக் கேட்டு
விடையைத் தேடி
சோர்ந்து விட்டேன்
இன்று
ஓடிய ஓட்டத்துக்கு
முற்றுப்புள்ளியை
வைத்துவிட்டு
இந்த நிமிடமும் வரை
என்னைக் கேள்விக்குறியாக
மாற்றிய தந்தை
மரணித்தும் வாழ்கிறார்
எந்தன் ஏக்கத்துடன்
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.