விளை நிலங்கள் காத்திடுவோம்!
காடு கரை திருத்தி
நாடெல்லாம் கழனி செய்து
வியர்வை நீர் பாய்ச்சி
உழைப்பு உரமிட்டு
தானியங்கள் விளைந்திட
தளராது பாடுபடும்
தங்க மகன் விவசாயி
நம் நாட்டின் முதலாளி,
முதலாளி இல்லையென்றால்
முதலுக்கே மோசம் தான்
சுவரை வைத்துத் தான்
சித்திரம் வரைய வேண்டும்
உழவனுக்குச் சுவரெல்லாம்
செழிப்பான நிலம் தானே?
கண்பட்ட இடமெல்லாம்
கழனியாய் இருந்தது போய்
மண் கண்ட இடமெல்லாம்
மனைகளாய் மாறியிங்கு
கல் முளைக்க ஆரம்பித்தால்
பண்பட்ட பூமியெல்லாம்
பாழாய்ப் போய்விடும்
நிலமது பாழானால்
விண் தொட்ட விவசாயம்
வீழ்ந்திடுமே விரைவினிலே
இந்நிலை தொடர்ந்திட்டால்
இந்தியா கையேந்தும்
அயல் நாட்டில் உணவுக்காய்...
அந்நிலை தவிர்ந்திடுவோம்
விளை நிலங்கள் காத்திடுவோம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.