மக்கள் மனதில்...!
ஜனநாயகத் திருவிழா தேர்தல்
ஜனங்களின் மனங்காட்டும் விழாவதுவே
ஜனங்கள் நினைத்தால் அரியணை
அவரே மறந்தால் தோல்விதான்
மக்கள் மனதை எடைபோட முடியாது
மகுடம் சூட்டும் நாள் வரை.
ஆளும் கட்சி நாங்கள் என்றார்
தலைமைக்கோ நெருக்கம் என்றார்
செல்வாக்கு தனக்கே என்றார்
செல்வத்தையும் வழங்கினார் வாரி
அமைதியாய்த் தோற்கடித்தார் சிலரை
தன் ஆயுதமாம் ஓட்டை வைத்து.
ஆண்ட கட்சி நாங்கள் என்றார்
ஆளும் கட்சியைக் குறையும் சொன்னார்
அரியணை தனக்கு வந்தால்
அத்தனையும் செய்வோம் என்றார்
பேச்சுக்கு மயங்காமல் மக்கள்
வாக்களித்து தீர்ப்பும் சொன்னார்.
மக்கள் நலனே நோக்கமென்றார்
தேசிய உணர்வே நல்லதென்றார்
மாற்றத்தால் முன்னேற்றம் என்றார்
ஓட்டைப் போட்டு நாட்டைப் பாரென்றார்
எவர் சொன்னதையும் மனதில் போடவில்லை
மக்கள் ஓட்டுப் போட்ட பின்தான் தெரிந்தது.
யார் என்ன சொன்னாலும்
எத்தனை ஆசை காட்டினாலும்
எவ்வளவு பணம் கொடுத்தாலும்
மக்கள் தீர்ப்பைக் கணிக்க முடியவில்லை
வென்றவர் யாரென்று பார்த்தால்
மக்கள் மனதில் நின்றவர் மட்டுமே!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.