புதுக்குமுகம் நாம் படைப்போம்
துடிக்கின்ற சிதறலாக
உடல்பிய்ந்து எரிந்திடவே
வெடிக்கின்ற குண்டுகளா
விடியலுக்கு ஒளிகூட்டும்?
குருதியாறு ஓட்டத்தில்
குமுறுகின்ற ஓலமெழ
உருவாக்கும் கலவரமா
உயர்மதத்தின் பெருமைபேசும்?
போர்க்களமாய்த் தெருக்களெல்லாம்
பெயர்ந்துசுடு காடாக
ஆர்க்கின்ற வன்முறையா
அருங்கொள்கைத் தீர்வாகும்?
ஒற்றுமையாய்ப் பலகாலம்
ஒருகுலமாய் வாழ்ந்ததெல்லாம்
வெற்றுரையாய்க் கனவாக
வேற்றுமையில் மடிவதுவோ?
சாதிகளும் மதங்களுமா
சாதனையை இங்களிக்கும்?
பேதங்கள் நாம்வளர்த்தால்
பெருமழிவே முன்நிற்கும்!
மனிதநேயம் ஒன்றேதான்
மாந்தர்தமை வாழவைக்கும்!
புனிதவன்பில் உழைத்துயரப்
புதுக்குமுகம் நாம்படைப்போம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.