எதற்காய் நீதி நூல்கள்?
திருக்குறளில் சொல்கின்ற கருத்தைப் போன்று
திகழ்நீதி நூல்கள் இவ்வுலகில் உண்டோ
அரும்நூல்கள் பதினென்கீழ்க் கணக்கில் கன்னம்
அறைந்தாற்போல் சொலும் நீதி வேறெங்குண்டோ
பெருமைமிகு காப்பியங்கள் உரைக்கும் நீதி
பெயர் சொல்லும் வேற்றுமொழி நூல்கள் உண்டோ
செருக்களமோ இல்லறமோ சங்க நூல்கள்
செப்பியப்போல் நீதிகள்தாம் எங்கே உண்டு!
வகைவகையாய் நீதிகளைச் சொல்லும் நூல்கள்
வரிசையாக இங்கிருந்தும் பயன்தான் என்ன
நகையாகும் காட்சியாக நெருப்பைத் தொட்டால்
நன்குசுடும் என்றறிந்தும் தொடுகின்றார்கள்
பகையாக்கும் கடன் அன்பை முறிக்கும் என்று
பார்த்தறிந்தும் வாங்கி நட்பை இழக்கின்றார்கள்
புகைஉயிரைக் குடிக்குமென்று தெரிந்திருந்தும்
புதுசுருட்டைப் பற்றவைத்தே இழுக்கின்றார்கள்!
வாழ்வுமதி அழியுமென்னும் கள்ளுண்ணாமை
வடித்தகுறள் படித்தபடி குடிக்கின்றார்கள்
தாழ்வில்லை பிறப்பொக்கும் குறளைக் கற்றும்
தமக்குள்ளே சாதிகூறி வெட்டுகின்றார்
ஊழ்வினைதாம் ஏழ்மைக்கு வித்தாம் என்றே
உழைப்புயர்த்தும் என்றறிந்தும் முடங்குகின்றார்
வீழ்கின்றார் அறிவிருந்தும் அறிவற்றாராய்
விட்டிலென இறப்பதற்கா நூல்களிங்கே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.