தெருவோர வாழ்க்கை

தெருவோர விளக்கினிலே படித்த பல்லோர்
தெளிந்தறிவு பெற்றுயர்ந்தார் உலகின் முன்னால்
அருவருப்பு வாழ்க்கையென்று நம்மில் பல்லோர்
அங்கிருப்போர் முகம்பார்த்து முகம்சு ளிப்பர்
பெருவாழ்வு அதுவென்றே குடும்ப மாக
பெற்றெடுத்த குழந்தையுடன் வாழ்வோ ரெல்லாம்
அருமையான இந்நாட்டின் குடிக ளன்றோ
அவலத்தை போக்கநம்மில் நினைத்தார் யாரே !
நடைமேடை தனைவீடாய் சுற்ற மென்னும்
நாய்களொடும் பன்றிகளின் நட்பி னோடும்
விடைகாண முடியாத வாழ்க்கை தன்னில்
வினாக்குறியாய் நாள்தோறும் வாழு கின்றார்
கிடைக்கின்ற கூலிவேலை பிச்சை யென்று
கிழக்குமேற்கின் இடைபட்ட பகலி லெல்லாம்
எடைபோட முடியாத வாழ்க்கை தன்னை
எந்திரமாய் ஓட்டுகின்றார் வழியே இன்றி!
மக்கள்தம் நடமாட்டம் அதிக முள்ள
மாலைநேரம் பாதையோரம் கடைவி ரித்துத்
திக்கெட்டும் கிடைக்கின்ற பொருள்கு வித்துத்
திருடாமல் பிறருழைப்பைச் சுரண்டி டாமல்
கக்ககத்தில் சுருட்டாமல் ஏமாற் றாமல்
கண்ணியமாய் உழைக்கின்றார் நேர்மை யாக
பக்கத்தில் நின்றவரைப் பாராட் டாமல்
பாராமல் செல்கின்றோம் மனித மின்றி !
தள்ளுவண்டி தனில்இட்லி சுட்டு விற்போர்
தாகத்தைத் தீர்க்கின்ற இளநீர் விற்போர்
குள்ளமனம் இல்லாமல் கனிகள் காய்கள்
குவித்துவைத்து சத்தமாகக் கூவி விற்போர்
கள்ளமில்லா உள்ளமுடன் அறுந்து போகும்
கால்செருப்பை தைத்தளிக்கும் தொழிலைச் செய்து
பள்ளத்தில் இருப்போர்க்குக் கைநீட் டாமல்
பாராமல் செல்கின்றோம் மனிதமின்றி !
நடைபாதை வாசியாக வாழு கின்ற
நரிக்குறவர் பாம்பாட்டி கழைக்கூத் தாடி
அடைகாக்கும் கோழியொடு ஆடு மாடு
அருமையாக வருங்காலம் எடுத்த ளிக்கும்
அடைத்துவைத்த அழகுகிளி கீரிப் பிள்ளை
அனைத்துமொரு குடும்பமாகப் பசியி னோடு
புடைசூழ இருக்கின்ற அவலம் கண்டும்
புறந்தள்ளிச் செல்கின்றோம் மனித மின்றி !
மனிதருள்ளே அவரும்தாம் மனித ரென்று
மதிக்கின்ற மனந்தன்னைப் பெறுவோம் நாமும்
இனிதாக அவர்வாழ திட்டம் தீட்டி
இருப்போரை முன்னேற்ற முனைவோம் நாமும்
குனிந்திருக்கும் அவர்வாழ்வை நிமிர வைத்துக்
குடிமக்கள் உரிமையினை கொடுப்போம் நாமும்
தனிக்கூட்ட மன்றவரோ சமுதா யத்தைத்
தழைக்கவைக்கும் நறுங்கூட்டம் அணைப்போம் வாரீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.