பூக்க மறந்த பூக்கள்
சாதிகளின் ஆணவத்தால் பெற்றோர் தம்மின்
சாகடிக்கும் போர்குணத்தால் வாழ்க்கை தன்னில்
சாதிக்கக் கனவுகண்டே இளமை தன்னில்
சரித்திரமாய் மாற்றுகின்றி உழைப்பி னூடே
வீதிகளில் சாதிமீறிக் காதல் செய்தோர்
விரட்டியுயிர் பறிக்கின்ற காட்சி கண்டே
மோதிவெற்றி பெறமுடியா தென்று காதல்
மோனப்பூ மலராத பூக்க ளானார் !
அழகான பருவமேனி கல்வி கற்றே
அறிவுடனே திகழ்கின்ற இளமைக் கன்னி
பழக்கமாகப் பெண்பார்க்க வந்த வர்கள்
வாய்கேட்ட கேள்விகட்குப் பதிலு ரைத்தும்
பழக்கமாகிப் போய்விட்ட ஆணா திக்க
பாவியரோ மாடென்றே விலையைப் பேச
முழங்குசம உரிமையென்று பேசி னாலும்
முதிர்கன்னி யாய்ப்பூக்கா பூக்க ளானார் !
உடற்கூறு சரியாக இருந்த போதும்
உள்ளத்துள் ஆசைதாம் இருந்த போதும்
அடலேறு எனச்சொல்லும் கணவ னுக்கோ
அதில்குறைதான் இருப்பதினை அறிந்த பின்பும்
முடமாகிப் புகுந்தவீட்டின் பெருமை காக்க
மூச்சுவிட முடியாமல் மலடி யாகக்
குடம்குடமாய்க் கண்களிலே நீரைக் கொட்டிக்
குமைகின்றாள் பூவையவள் பூக்கா பூவாய் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.