எப்படி மறப்பேன்?

ஆல்வேம்பு இருபக்கம் வரிசை யாக
அரசுபுளி இடையிடையே நின்றி ருக்க
கால்நீட்டி கைவீசி நடந்த பாதை
கண்குளிரச் செம்மண்ணாய் விரிந்த பாதை
கோல்வீசி ஆடுமாடு விரட்டிக் கொண்டு
கொல்லைக்குச் சென்றுவந்த அழகுப் பாதை
சூல்கொண்ட கார்முகில்கள் களைந்த போல
சுவடின்றிப் போனதுவே கிராமந் தன்னில் !
மண்குடிசை சுற்றிசிறு கீரைப் பாத்தி
மலர்செடிகள் கறிகாய்கள் என்றே தோட்டம்
கண்முன்னே நேற்றிருந்த உண்மைக் காட்சி
கனவாகிக் கற்பனையாய் ஆன தின்று
தண்ணீரால் நிறைந்திருந்த குளங்கள் ஏரி
தளும்பகுடம் இடுப்பேந்தி வந்த பெண்கள்
கண்மாயும் துணிதுவைத்த ஆற்றுக் கல்லும்
காணாமல் போனதுவே மணலைப் போன்றே !
வீட்டிற்குள் நோய்கிருமி நுழைவ தற்கு
விட்டிடாமல் மெழுகிட்ட சாணம் இல்லை
வீட்டிற்குள் வெப்பத்தைத் தணிப்ப தற்கு
வீசிவந்த பனையோலை விசிறி இல்லை
வீட்டிற்குள் பாட்டியுடன் பேரன் பேத்தி
விளையாடிய பல்லாங்குழி ஆட்டம் இல்லை
வீட்டிற்குள் நடைபயில் குழந்தை கையில்
வீற்றிருந்த நடைவண்டி படமும் இல்லை !
திண்ணையிலே மரப்பாச்சி பொம்மை வைத்துத்
திருமணந்தான் செய்தாடும் விளையாட் டில்லை
மண்மீது குழிபறித்துக் கோலி குண்டால்
மரத்தடியில் ஆடிவந்த விளையாட் டில்லை
கண்வியக்கக் கயிறுசுற்றிப் பம்ப ரத்தைக்
கரம்மீது சுழலவிட்ட விளையாட் டில்லை
விண்மீது பறக்குமாறு தட்டி விட்டு
விளையாடும் கில்லிதாண்டல் எதுவு மில்லை !
பொன்வண்டு பிடித்துவந்து தீப்பெட் டிக்குள்
பொத்திவைத்துத் தின்னயிலை உள்ளே போட்டும்
சின்னசிட்டு குருவிவந்து தின்ப தற்குச்
சிறுமணிகள் முற்றத்தில் சிதறப் போட்டும்
பண்ணிசைக்கும் குயில்குரலைக் கேட்ப தற்குப்
பக்கத்துத் தோப்பிற்குச் சென்ற மர்ந்தும்
வண்ணத்துப் பூச்சியினைப் பிடித்த தெல்லாம்
வாய்வார்த்தை எனச்சொல்லும் நிலையா யிற்று !
மஞ்சளிலே ஒளிர்ந்தமுகம் தாவ ணியிலே
மனமீர்த்த குமரிப்பெண் வரப்பு தன்னில்
கஞ்சிகுடம் தலைசுமக்க நடந்து சென்று
கழனியிலே உழைக்குமாமன் குடிக்கத் தந்து
கொஞ்சிவிளை யாடிபயிர் வளர்த்த வயல்கள்
கொலுவிருந்த மாசில்லாத் தூய காற்று
நெஞ்சுவக்க சுரந்தவன்பு பாசத் தோடு
நேற்றிருந்த கிராமத்தை எப்படி மறப்பேன் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.